பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நந்தியின் காதில் சொல்வது ஏன்?

Update: 2022-08-05 01:44 GMT

சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபடுபவர்கள் யாரும் நந்தியை வழிபடாமல் செல்ல மாட்டார்கள். நந்தியின் காதில் நம் வேண்டுதல்களை சொல்லாமல் வெளியேறுவது சிவ வழிபாட்டை முழுமையாக்குவதில்லை என்று கூட சொல்லலாம் . தெய்வங்களுக்கெல்லாம் அதிபதியான சிவபெருமானை பக்தர்கள் வணங்கும் வேளையில், நந்திக்கும் அதே அளவு முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

நம்முடைய குறைகளை நாம் சிவபெருமானிடமே சொல்லலாமே, எதற்காக நந்தியின் காதில் ரகசியமாக சொல்ல வேண்டும் என்பது போன்ற பல கேள்விகளுக்கு நம் புராணத்தில் பதில் உண்டு.

நந்தி பெருமான் விழிப்புணர்வின் உச்சம். அவரால் அவரை சுற்றி நடக்கும் அனைத்தையும் கேட்கவும், கவனிக்கவும் முடியும். நாம் ஐந்து நிமிடங்களுக்கு மேல் யாராவது பேசுவதை கேட்டாலே கவனம் பிசகி சற்று அயர்ந்து விடுவோம். ஆனால் எதையும் ஆழ்ந்து கவனிக்க கூடியவர். அவர் விழிப்புணர்வின் அடையாளம் என்றே சொல்லலாம். ஏன் நந்தி பெருமான் சிவபெருமானின் நேர் எதிரே அமர்ந்திருக்கிறார் என்பதற்கு சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், பாற்கடலை கடைந்த போது சிவபெருமான் அதிலிருந்து பெருகிய நஞ்சை பருகினார்.

பருகிய நஞ்சை அவர் விழுங்கவுமில்லை, தன்னுடைய தொண்டை குழியிலேயே நிறுத்தினார் அவ்வாறு செய்தமையால் தான் அவர் நீலகண்டர் என்றே அழைக்கப்பட்டார். இவ்வாறு ஒரு நிகழ்வு நடந்த போது விடத்தை தொண்டையில் நிறுத்தியதால் அவருக்கு பெரும் எரிச்சல் உணர்வு ஏற்பட்டதாகவும் அதை போக்க நந்தி தேவரை தன் முன் அமர்ந்து காற்று வீச சொன்னதாக ஒரு புராணக்கதை சொல்கிறது.

நந்தி வழிபாட்டின் முக்கிய அம்சமே அவர் காதில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை சொல்வது தான். ஒரு முறை சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது பார்வதி தேவியை ஜலந்த்ரா எனும் அரக்கன் கடத்தி சென்றான். நடந்த நிகழ்வை சிவபெருமானிடம் எவ்வாறு சொல்வது என்று தெரியாமல் மற்ற தேவர்களும் கடவுள்களும் அஞ்சி நின்றனர். பின்பு இதை விநாயக பெருமானிடம் தெரிவித்து சிவபெருமானிடம் சொல்லும்படி கூறினார்கள்.

விநாயக பெருமானும் சிவபெருமானின் தியானத்தை கலைக்க பெரும்பாடு பட்டார் ஆனால் இயலவில்லை. அப்போது அவருக்கு தோன்றியது சிவபெருமானுக்கு எதிரில் தியானத்திலிருக்கும் நந்தியிடம் சொன்னால், சிவபெருமானுக்கு கேட்கும் என்பதை உணர்ந்து நிகழ்ந்ததை நந்தியின் காதில் சொன்னார் விநயாக பெருமான். அது உடனே சிவபெருமானின் காதுக்கு சென்றது.

அன்று முதல் தொடங்கியது தான் இந்த மரபு. நந்தி தேவரிடம் நாம் எந்த வேண்டுதலை வைத்தாலும் அது சிவபெருமானின் காதுகளுக்கு எட்டும்.

Similar News