பேசுவதில் தடை, திருமணத்தடை, சகல செல்வங்கள் என அனைத்தும் அருளும் ஆச்சர்ய தலம்
திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் ஆலயம், சீர்காழி
திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் ஆலயம் தமிழகத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் கீழை திருக்கோலக்கா எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு வரலாற்று ரீதியான பெயர் யாதெனில் சப்தபுரி என்பதாகும். சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட ஸ்தலம் இது. இங்கிருக்கும் ஈசன் சப்தபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கிருக்கும் அம்பாளுக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். தேவாரம் பாடப்பெற்ற 275 ஸ்தலங்களில் இந்த கோவிலும் ஒன்று.
இந்த கோவிலின் மற்றொரு பெயர் திருத்தலம் உடையார் என்பதாகும். சீர்காழியில் இருந்து 1 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. காவேரியின் வடக்கரை கோவில்களில் இது 15 ஆவது கோயில். இக்கோவிலுக்கு மிக அருகிலேயே உலகளந்த பெருமாள் கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில் போன்ற ஏராளமான புகழ் பெற்ற தலங்கள் அமைந்துள்ளன.
திருஞானசம்பந்தர் குழந்தையாக இருந்தபோது ஒவ்வொரு தலமாக சென்று அவர் பாடினார். அப்போது குழந்தை கைகளை தட்டி பாடுவதை கண்ட ஈசன் குழந்தையின் கையில் தாளத்தை கொடுத்தார். ஆனாலும் அதை சம்பந்தர் பெருமான் தட்டிய போது ஓசை வரவில்லை. பார்வதி தேவியார் தன் அருளால் ஓசை கொடுத்த பிறகே அந்த தாளத்திலிருந்து ஓசை பிறந்தது எனவே தான் இங்கிருக்கும் அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்றும். ஈசனுக்கு சப்தபுரீஸ்வரர் என்றும் பெயர் வந்தது.
பேசுவதில் சிக்கல் இருப்பவர்கள் இக்கோவிலில் இருக்கும் ஆனந்த தீர்த்தத்தில் நீராடி அம்பிகையிடம் மனமுருக வேண்டி அன்னையின் பாதத்தில் தேனை வைத்து வணங்கி அதனை எடுத்து உண்டால் குறை தீரும். தாளத்திற்கே ஓசை கொடுத்த அற்புத அம்பிகை நமக்கும் அருள் செய்வாள் என்பது நம்பிகை. அதுமட்டுமின்றி இந்த தலத்தில் லட்சுமி தேவியார் மகா விஷ்ணுவை கரம் பிடிக்க வேண்டி கடும் தவம் இயற்றினார். எனவே இங்கிருக்கும் இலட்சுமி தேவியார் மிகுந்த சக்தி வாய்ந்தவராக அருள் பாலிக்கிறார். அனைத்து செல்வமும் அருள்பவராக வீற்றிருக்கிறார். கூடுதலாக திருமணமாக வேண்டி அல்லது திருமண தடை நீங்க பெண்கள் ஆறு வாரம் தொடர்ந்து அம்பிகை மஞ்சள் சாற்றி வந்தால் தடைகள் நீங்கும்.
பேச்சுத்துறை மற்றும் இசை துறையில் இருப்பவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து வணங்குவதால் அவர்களுக்கு பெரும் பெயரும், புகழும் கிட்டும் என்பது ஐதீகம்.