வளமான மண வாழ்வுக்கு வணங்குவோம் :வடுவூர் கோதண்டராமர் கோவில்
ராமர் என்றால் மனதிற்கு இனியவன் என்ற பொருள் உண்டு. காண்போர் கண்களால் அவர்கள் இதயத்தில் வீற்றிடும் உள்ளம் கவர் கள்வனான ஸ்ரீராமர் திருவாரூர் மாவட்டம் வடுவூரில் கோவில் கொண்டுள்ளார்.
ராமபிரான் தன் வனவாச காலத்தில் கன்வர் முதலிய ரிஷிகளின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்து விடைபெறும் சமயத்தில் அந்த முனிவர்கள் ராமனை பிரிய மறுத்து கண்ணீர் மல்க அவர்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது என்று அன்பு கட்டளை இட்டனர். அப்போது அவர்களை சமாதானப்படுத்த வகையில் ராமர் தனது திருவுருவை தானே செய்து ரிஷிகளிடம் கொடுக்க அவர்கள் அந்த திரு உருவின் அழகில் மயங்கி அதுவே போதும் என கூறினர்.
ராமனால் செய்யப்பட்ட இந்த திருவுருவம் முற்காலத்தில் நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி இருக்க, அன்னியர்களிடம் இருந்து ஆபத்து நேராமல் இருக்க இந்த திருஉருவத்தை தலை ஞாயிறு என்ற இடத்தில் பூமிக்கு அடியில் மறைத்து வைத்திருந்தனர். பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் கனவில் இந்த ராமர் தோன்றி தான் இருக்கும் இடத்தை காட்ட உடனே மன்னர் தனது பரிவாரங்களுடன் அங்கு சென்று ராமரை தஞ்சைக்கு எடுத்துச் சென்றார். அப்போது நள்ளிரவு ஆகிவிட்டதால் வடூரில் அப்போது இருந்த ஸ்ரீ கோபாலன் கோவிலில் ஸ்ரீராமரை எழுந்தருள செய்துவிட்டு இளைப்பாரினர்.
அப்போது ஊர்மக்கள் "ஸ்ரீ ராமர் இங்கேயே எழுந்துருள வேண்டும் அவரை எடுத்துச் சென்றால் அனைவரும் கோவிலில் அப்போது இருந்த மொட்டை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வோம் " என்று கூறினர். இதனால் அரசனும் ஸ்ரீ சீதா ராமரை இந்த ஊரிலேயே எழுந்தருள செய்து விட்டு சென்றதாக அறியப்படுகிறது. வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீ ராமர் தவிர ஆதி பெருமாள் ஆன கோபாலன், கல்வி கடவுள் ஹயக்ரீவர் தனித்தனி சந்ததிகளில் அருள் பாலிக்கிறார்கள்.
மேலும் ஆழ்வார்களையும் ஆச்சாரியார்களையும் தரிசிக்கலாம். ஸ்ரீ ராமரின் தேரடி அருகில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு மாதமும் மூல நட்சத்திரத்தில் அபிஷேகம் நடைபெறுகிறது. கோவில் நுழைவு வாயில் அருகில் லக்ஷ்மி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தில் லட்சுமி நரசிம்மருக்கும் சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாருக்கும் அபிஷேகம், யாகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடக்கிறது.