திருப்பரங்குன்றம் அல்லது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் என்பது இக்கோவிலின் திருநாமம். முருக பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று. ஆறாம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் குடவரை கோவில் இது. இந்திரனின் புதல்வியான தெய்வானையை மணந்து சூரபத்மனை வதைத்த இடம் என்பது புராண குறிப்பு.
இந்த கோவில் மதுரையிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருக பெருமானோடு சேர்ந்து சிவன், விஷ்ணு, விநாயகர், துர்கைக்கும் தனித்தனி சந்நிதிகள் உண்டு. இந்த கோவிலில் சைவ முறைப்படி வழிபாடுகள் அனைத்தும் நடத்தப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் இங்கு நிகழும் கந்த சஷ்டி விழா உலக பிரசித்தி பெற்றது.
கந்த புராணத்தின் படி சூரபத்மன் என்கிற அரக்கன் கடும் தவம் இயற்றி பெற்ற வல்லமையால் தேவர்களை கடுமையாக இம்சித்து வந்தான். 1008 உலகங்களையும் ஆண்டு தன் மனைவியான பதுமகோமளையுடன் ஏராளமான மகன்களை பெற்றெடுத்து வீரம்கேந்திரம் என்கிற நகரை தலைமை இடமாக கொண்டு கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். இவனுடைய கொடுமைகளை தாளாத இந்திரன் முருகனிடம் தம்மை காத்தருளுமாரு சரண் புகுந்தார். தன்னுடைய தூதுவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பினார் முருகர். எதற்கும் மசியாத சூரபத்மன் தொடர்ந்து தேவர்களை இம்சித்து வந்ததால் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்த போரில் சூரபத்மனை இரண்டு துண்டுகளாக பிளந்தார் முருக பெருமான். அதில் ஒரு துண்டு மயிலாக மற்றொன்று சேவல் கொடியாக ஆனதாக வரலாறு சொல்கிறது. சூரபத்மனை வதைத்த நாளையே கந்த சஷ்டி என கொண்டாடி மகிழ்கிறோம்.
அரக்கனிடம் இருந்து தேவர் குலத்தை காத்த முருக பெருமானுக்கு தன்னுடைய மகளான தேவசேனையை மணம் முடித்து கொடுத்தார் இந்திரர். மேலும் கந்தர் அனுபதியில் உள்ள குறிப்பின் படி, இந்த திருமணத்திற்கு வந்திருந்த தேவதைகள் தேவர்களையெல்லாம் முருக பெருமான் தங்களுடைய மனோ வேகம் அதாவது நினைவின் வேகத்தில் பறந்து மீண்டும் சொர்கம் சென்று சேருமாறு ஆணையிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
சம்பந்தர் 7 ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலில் சிவன் மீது தேவாரம் பாடியுள்ளார். ஞானசம்பந்தர் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களான சேர, சோழ பாண்டிய மன்னர்கள் மூவரையும் இந்த கோவிலில் சந்தித்து உள்ளாராம். மேலும் நக்கீரர் முருகனின் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். திருப்புகழ், கந்தபுராணம் போன்ற பல சங்க இலக்கியங்கள் இந்த கோவிலின் பெருமையை நமக்கு பரை சாற்றுகிறது.