சித்திரை 1 தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுவது ஏன்?

Update: 2022-04-14 01:43 GMT

சித்திரை பாவையே உன்றன் வருகையால் தரணி செழிக்க வேண்டும்!

என்பது பண்டைய கூற்று. சித்திரை மாதம் பிறக்கையில் தென்னகத்தில் இளவேனில் காலம் தொடங்குகிறது. இந்த காலத்தில் முக்கனிகள் எனும் பிரதான கனிகளான மா, பலா மற்றும் வாழை செழித்து வளரும் காலம் இது. இந்த நாளில் தான் பிரம்மா இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்தார் என்ற நம்பிக்கையும் உண்டு.

தமிழ் புத்தாண்டு என்பது வெறுமனே ஒரு நாளை தமிழர்கள் தேர்வு செய்துவிடவில்லை. இதற்கு பின் அறிவியல் காரணங்களும், இலக்கிய ஆதாரங்களும் அடிப்படையாக உள்ளன. பூமி சூரியனை ஒரு தடவை சுற்றி வர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடங்கள் 48 நொடிகள் ஆகின்றன. இந்த கால அளவு தமிழ் ஆண்டின் கால அளவை ஒத்து போகிறது அது மட்டுமின்றி சூரியன் மேஷ ராசியிலிருந்து நுழையும் போதும் ஒரு ஆண்டு தொடங்கி,மீன ராசியில் வெளியேறும் போது முடிவடைகிறது. அதுமட்டுமின்றி இந்த காலகட்டத்தில் தான் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கிறது.

சூரியனின் வெப்பம் உக்கிரமாகிறது, அதன் தீவிரம் அதிகரிக்கிறது. இதனால் ஒருவரின் வாழ்வில் குறிப்பிட்ட சில மாறுதல்கள் நிகழ்கின்றன. இந்த மாறுதல்களை குறிக்கும் பொருட்டும், புதுமையான் ஒரு நிகழ்வு தொடங்குவதாலும், அறிவியல் ரீதியாக ஒரு கால அளவு ஒத்துப்போவதாலும் சித்திரை 1 ன்றினை தமிழர்கள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.

இலக்கிய ஆதாரங்களை தேடினால், பங்குனி மாதம் முடியும் போதும் சித்திரையின் தொடக்கத்திலும் தான் வேங்கை மரம் பூக்கிறது என்பது தாவரவியல் குறிப்பு. இந்த குறிப்பின் அடிப்படையில், பார்த்தால் மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை " இங்கே தலை நாள் என்பதை சித்திரை ஒன்றாம் நாள் பூத்த வேங்கை என்று பொருள் கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி நம்முடைய பழமொழி நானூறில், "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால் " என்று பாடுகிறது. இந்த அடிப்படையிலும் சித்திரை 1 என்பது பண்டைய காலம் தொட்டே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுவதை காண முடிகிறது.

இந்த இனிய நாளில் முக்கனிகளை அலங்கரித்து கனி கானுதல் எனும் நிகழ்வை கொண்டாடுவதும் உண்டு.

புதியவைகளுக்கான வாய்ப்பை நம் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்குமான ஒரு வாய்ப்பாக வரவேற்போம்! கொண்டாடுவோம்!

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Similar News