அயோத்தி ராமர் கோவிலுக்கு நாமக்கலில் தயாரிக்கப்படும் ஆலய மணிகள் - மொத்தம் 108 ஆலய மணிகள்!
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியின் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு புனித தலங்களில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு வருகிற நிலையில் அயோத்தியில் வைக்கப்பட உள்ள ஆலயமணிகள் நாமக்கல் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் சேர்ந்த பக்தர் ஒருவர் ராமர் கோவிலின் பிரகாரத்தில் ஆலயமணிகளை வைக்க முடிவு செய்தார். இதனை அடுத்து நாமக்கல் முல்லை நகரில் உள்ள ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் நிறுவனத்திடம் இதற்காக அணுகி அவர்களிடமிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கான ஆலயமணிகள் தயாரிக்கப்பட்டு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்தபதிகள் ராஜேந்திரன் மற்றும் காளிதாஸ், "அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் பிரகாரத்தில் 108 ஆலயமணிகள் வைக்க முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து முதல் கட்டமாக 12 ஆலய மணிகளை தயாரித்து உள்ளோம்! அதோடு 120 கிலோவில் 5 மணிகளும், 70 கிலோவின் 6 மணிகளும், 25 கிலோவில் ஒரு மணியும், மேலும் 36 பூஜை மணிகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட அனைத்து ஆலயமணிகளும் 1200 கிலோ எடையை கொண்டுள்ளது என்று தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி நாமக்கலில் தயாரிக்கப்படும் ஆலயமணிகள் அனைத்தும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட பிறகு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.
Source : Dinamalar