யாருக்கு நரகம் யாருக்கு சொர்கம் என்ன சொல்கிறது சாஸ்திரம்!

Update: 2022-03-16 02:22 GMT

நம் கலாச்சாரத்தில் சொர்கம், நரகம் என இரு விஷயங்கள் சார்ந்த நம்பிக்கை அதிகம் உண்டு. தவறு செய்பவர்களுக்கு நரகம், நல்லது செய்பவர்களுக்கு சொர்கம். இந்த கூற்றில் எந்த ஆழமான கருத்தும் இல்லை. மிகவும் மேலோட்டமான கருத்தாகவே இது உள்ளது. இந்த உலகில் எது நல்லது? எது கெட்டது என்பதை தீர்மானிப்பவர் யார்? ஒருவருக்கு நல்லதாக தோன்றுவது நிச்சயம் மற்றவருக்கு தீமையாக தோன்றும். எனில் யார் நல்லவர் யார் கெட்டவர்.

தவறிழைக்கும் மனிதர்கள் அனைவருக்கும் அவர்கள் செய்யும் தீமைக்கு பின் ஒரு நியாயம் இருந்தே இருக்கிறது. எனில் எந்த அடிப்படையில் ஒருவருக்கு நரக பிராப்தி கிட்டும்.

இதனை விளக்கும் பொருட்டு, ஓர் அழகான சூஃபி கதை சொல்லப்படுவதுண்டு. என்னவெனில், இரு நண்பர்கள் பாலைவனம் ஒன்றில் உலவி கொண்டிருந்தனர். அது ஒரு குளிர் காலம், மாலை நேரம், அவர்களுக்கு கதகதப்பான சூழ்நிலை தேவையாக இருந்தது. எனவே நெருப்பு மூட்டி குளிர் காயலாம் என முடிவு செய்தனர். அந்த பாலைவனத்திலிருந்து அவர்களால் விறகுகளை திரட்ட முடிந்தது. ஆனால் அதற்கு தேவையான நெருப்பை அவர்களால் கண்டறிய முடியவில்லை.

அவர்கள் இருவரும் மாயங்கள் பல கற்ற பெரும் அறிஞர்கள். அவர்களால் அவர்கள் விரும்பும் வடிவை எடுக்க முடியும். அவர்களுடைய மரபில் ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது, நரகத்திற்கு செல்பவர்கள் நெருப்பு போன்ற கொடும் தண்டனைகளை பெறுவார்கள் என்பது.

இச்சூழலில், நெருப்பு மூட்டி குளிர் காய நெருப்பு இல்லை என்றதும், அந்த இரு நண்பரில் ஒருவர் சொன்னார், நான் பறவையாக மாறி நரகம் செல்கிறேன். அங்கே தான் அதிக நெருப்பு இருக்கிறதே அதில் சிறிதை எடுத்து வருகிறேன். என சொல்லி சென்றவர் சில மணி நேரம் கழித்து வெறும் கையுடன் திரும்பினார்.

மற்றொரு நண்பர் கேட்டார் நெருப்பு எங்கே? நான் நரகம் முழுவதும் தேடி விட்டேன் அங்கே நெருப்பும் இல்லை அங்கே வேறெந்த கடுமையான தண்டனை சடங்கும் இல்லை. இந்த கதையின் தார்பரியம் என்னவெனில் நரகம் என்பது நாம் நினைப்பது போல நாடகத்தனமான ஒரு இடம் அல்ல. அது சூட்சுமாக இருக்கும் ஒன்று. எங்கே துன்பமும், துயரமும், அச்சமும், சோர்வும் இதர எதிர்மறை ஆற்றலும் இருக்கிறது அது நரகம். எங்கே ஆனந்தம், மகிழ்ச்சி, அன்பு, காருண்யம், கருணை இருக்கிறதோ அது சொர்க்கத்தின் குறியீடு அவ்வளவு தான். யார் எந்த ஆற்றலை அதிகம் வைத்திருக்கிறார்களோ அவர்கள் அதையே பிராப்தமாக பெறுவார்கள். நல்ல ஆற்றல் வைத்திருப்பவர் நரகம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கே சென்றாலும் அவர் பெறப்போவது நன்மையை மட்டுமே!

Similar News