இன்பம் பெருக்கும், செல்வம் பெருக்கும் ஆடிப்பெருக்கு! ஆடி 18 இன் தார்பரியம் அறிவோம்!
பருவமழை தொடங்கும் காலத்தில் வரும் பண்டிகை தான் ஆடிப்பெருக்கு. பருவமழை தொடங்குவதை குறிக்கும் இந்த விழா வளத்தை, செல்வத்தை, சுபிக்ஷத்தை பெருக்கும் விழாவாக கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழாவை ஆடி 18 ஆம் நாள் விழா என்றழைப்பதும் உண்டு.
தென்னிந்திய மாநிலங்களில் பரவலாக கொண்டாடப்படும் இந்த விழா. தமிழகத்திற்கு மிக விஷேசமான ஒன்று. ஆடி மாதத்தின் 18 ஆம் நாளான இன்று ஆடி 18 ஆம் பெருக்கு கொண்டாடப்படுகிறது. இயற்கை நமக்களிக்கு கொடைக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி விவசாயம் செய்பவர்களுக்கு இந்த ஆடி மாதம் மிகவும் சிறப்பான ஒன்று. ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள்.
இந்த மாதத்தில் உழுவதும், விதைப்பதும் மிக சிறப்பான பயனை தரும் என்பது நம்பிக்கை. இந்த நன்னாளில் தமிழகத்தை சுற்றி ஓடும் வற்றாத ஜீவ நதிகளை நன்றியுடன் வழிபடுவது மரபு. எனவே இந்த நன்னாளில் நதி மற்றும் ஆற்றங்கரை ஓரத்தில் மக்கள் மிக அதிகமாக கூடி இயற்கை அன்னைக்கு படையலிட்டு வணங்குவது வழக்கம்.
அதுமட்டுமின்றி இந்த நாளுக்கு ஆடிப்பெருக்கு என்ற பெயர் வரக்காரணம், இந்நாளில் இறைவனை வழிபடும் மக்களுக்கு சகலமும் பெருகும் என்பது நம்பிக்கை. மகிழ்ச்சி, இன்பம், பொருள், நகை, என அனைத்தும் பெருகுவதால் இந்த நாளை ஆடிப்பெருக்கு என்றழைத்தனர். அது மட்டுமின்றி இந்த நாளில் ஆடை ஆபரணங்கள் வாங்கினால் பெருகும் என்பதும் நம்பிக்கை.
தக்ஷிணாய காலம் தொடங்குவதை குறிக்கும் இந்த காலத்தில் தான் சிவபெருமான் ஆதிகுருவாக மாறி தன் சப்த ரிஷிகளுக்கு ஞானம் வழங்கினார் என்பதால் ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமான காலகட்டமாக இது கருதப்படுகிறது.
மேலும் இந்த நாளில் இறந்தவர்களுக்கு படையலிட்டு வழிபடுவதால் அவர்களின் கர்ம வினைகள் தீரும் என்பதும் நம்பிக்கை.
வீடுகள் தோறும் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, சர்க்கரை பொங்கல் போன்ற நெய்வேதியம் படைத்து வழிபடுவது வழக்கம். இந்த நாளில் பெண்கள் தங்களின் தாலி கயிற்றை மாற்றுவதும் வழக்கம். இதன் மூலம் சகல செளபாகியமும் நிலைத்து மங்களகரமான வாழ்வு அவர்களுக்கு அமையும். இந்த பண்டிகை இன்று நேற்று தோன்றியது அல்ல சங்க காலத்திலிருந்தே இருப்பதற்கான குறிப்புகள் சிலப்பதிகாரம் போன்ற நம் இலக்கியங்களில் உண்டு.