எண்களுக்கென்று தனி முக்கியத்துவம் உண்டு. இந்த பிரபஞ்சமே எண்களின் கட்டமைப்பால் உருவாக்கப்பட்டது. ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் நல்லது கெட்டது என அனைத்தையும் வெளிக்கொணர கணிதம் அவசியமாகிறது.
எண்களை வெறும் கணித உருக்கள் என்றளவில் புறந்தள்ளிவிட முடியாது. அவை நம் உலகின் இயக்கத்தோடு தொடர்புடையவை. ஒரு மனிதனின் வாழ்வோடு தொடர்புடையவை. அந்த வகையில் ஒவ்வொரு எண்ணிற்கென்று ஒரு தனித்துவம் உண்டு. ஒவ்வொரு எண்ணிற்கென்று குணாதிசயங்கள் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதியான பிரசன்னம் பார்ப்பதில் எண்ணின் பங்க் அலாதியானது.
அந்த வகையில் நம் இந்து மரபில் நாம் அதிகம் கேள்வியுறும் ஒர் எண் நூற்றியெட்டு. நூற்றியெட்டு என்பது புனித எண்ணாகவே கருதப்படுகிறது. பரிகாரங்களில் நூற்றியெட்டு முறை கோவிலை வலம் வருதல், நூற்றியெட்டு தேங்காய் உடைப்பது என எந்த வொரு பரிகாரத்தையும் நூற்றியெட்டு முறை செய்கிற போது அதன் பண்பும், அது கொடுக்கும் பலன்களும் நன்மையாக மாறிவிடுகின்றன.
மேலும், நூற்றியெட்டு திவ்யதேசங்கள், ஜப மாலை, ருத்ராக்ஷம் போன்ற புனித பொருட்கள் நூற்றியெட்டு என்ற முறையிலேயே வடிவமைக்கப்படுகிறது. சக்தி மிகுந்த பீஜ மந்திரங்கல், ஸ்லோகங்கள், யோக பயிற்சிகள் போன்றவை நூற்றியெட்டு முறை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
எனில் இந்த நூற்றியெட்டு எனும் எண்ணின் முக்கியத்துவம் என்ன? இந்த எண் எவ்வாறு இத்தனை சிறப்புகளை பெறுகிறது என்கிற கேள்வி எழுகிறது. அந்த வகையில், இதற்கு பலவிதமான பதில்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் சில இங்கே.
சமஸ்கிருதத்தில் எழுத்துக்கள் மொத்தம் 54. ஒவ்வொரு எழுத்துக்கும் ஆண் தன்மை ( சிவன்) மற்றும் பெண்தன்மை (சக்தி) என இரு வடிவங்கள் உண்டு. எனவே 54 என்பதன் இரட்டிப்பு எண் 108 என்று ஒரு சாரர் சொல்கின்றனர்.