அயோத்தி ராமர் கோயிலில் இதுவரை 1.5 கோடி பக்தர்கள் தரிசனம் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம்!

அயோத்தி ராமர் கோயிலில் இதுவரை ஒன்றரை கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

Update: 2024-04-25 03:17 GMT

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்க்கஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராய் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

அயோத்தி ராமர் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள் முதல் இதுவரை 1.5 கோடி பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குழந்தை வடிவில் இருக்கும் பாலராமரை தரிசனம் செய்துள்ளனர் .தற்போது கோயிலுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருகின்றனர். கோயிலின் கீழ்த்தள கட்டுமான பணி முழு அளவில் முடிவடைந்துள்ளது. முதல் தளத்தில் விடுபட்டிருந்த கட்டுமான பணி தற்போது துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

கோயிலை சுற்றி 14 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் விரைவில் கட்டி முடிக்கப்படும். கோயில் வளாகத்தில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன .இதனை உள்ளூர் மக்களே நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக தங்கும் வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இடங்களில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கலாம். இவ்வாறு பொதுச் செயலாளர் சம்பத்ராய் கூறினார்.


SOURCE :Dinaseithi

Similar News