72 அடி உயர பிரம்மாண்டமான அய்யனார் உள்ள ஆலயம் - எங்கு தெரியுமா?
மலேசியா என்றாலே பிரம்மாண்டம் தான். மிகப்பெரிய முருகன் கோவில் பிரம்மாண்டமான பச்சையம்மன் கோவில் என்று ஆன்மீக ரீதியாக பல ஆலயங்கள் மலேசியாவின் அடையாளங்களாக இருக்கின்றன அந்த வரிசையில் ஒன்றுதான் ஓம் ஸ்ரீ அய்யனார் ஆலயம்.
தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளி ஆன பெரியம்மா என்ற பெண் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மற்றும் களிமண் பொருட்களைக் கொண்டு அய்யனார் சிலை ஒன்றை சிறிய அளவில் உருவாக்கினார். காலப்போக்கில் இங்கே வழிபடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் தற்போது இந்த ஆலயம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் பழைய சிறிய அய்யனார் சிலையே தற்போதும் இங்கு வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது .
இந்த ஆலயமானது பல ஏக்கர் பரப்பளவு உள்ள ஒரு வகை பனைமரத் தோட்டத்தின் மத்தியில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தைச் சுற்றி ஆங்காங்கே காளையைத் தழுவும் இரண்டு வீரர்கள் கண், காது, வாயை மூடிய மூன்று குரங்குகள் , பசுத்தோல் போர்த்திய புலி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளன. மயில், வெள்ளை காகம் உள்ளிட்ட பலவிதமான பறவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் நாகதேவி, சந்நிதி விநாயகர் கோவில் போன்ற ஆலயங்களும் அய்யனார் கோவிலை சுற்றிலும் அமைந்திருக்கிறது.
அய்யனார் கோவில் வித்தியாசமான முறையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோவிலின் முகப்பில் வலது புறமும் ,இடது புறமும் வெள்ளை குதிரைகளின் மீது இரண்டு வீரர்கள் வலது கையில் கத்தியை பிடித்தபடி கோவிலுக்கு வெளியே பார்த்தபடி வீற்றிருக்கிறார்கள். இந்த இரண்டு குதிரை வீரர்களின் நடுவில் ஓங்கி உயர்ந்த கொடிமரம் காணப்படுகிறது. சிம்ம வாகனம் உள்ளது. செவ்வக வடிவத்தில் உள்ள இந்த ஆலயத்தில் நான்கு மூலையிலும் கட்டிடத்தை தாங்கும் தூண்களுக்கு பதிலாக தூணை ஒருவர் தாங்குவது போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.