ரூ.96 கோடி கொள்ளை போகும் அபாயம்.. இந்து கோவில் சொத்துக்கள் காக்கப்படுமா?
கோயில் சொத்துக்களை முறையற்ற வகையிலும், சட்ட விரோதமாகவும் பயன்படுத்தி, முறையற்ற வகையில் கட்டுமானத் திட்டங்களை தொடங்கியுள்ளதை எதிர்த்து, கோயில் வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன்பாக அறநிலையத் துறைச் செயலர், ஆணையர், சில செயல் அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை ஆலய வழிபாட்டாளர் சங்கத் தலைவரும், இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை நிர்வாகியுமான மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவை நேற்று மதுரை கிளை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தன. மனுதாரரின் வாதத்தின்படி, ஒரு கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, அந்த கோயில் நிதியில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் கட்டினால் சரியானது தான். ஆனால், ஒரு கோயில் நிலத்தில் திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் கட்ட, வேறொரு கோயில் உபரி நிதியை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. இது அறநிலையத்துறை விதிகளுக்குப் புறம்பானது. கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் தங்கும் விடுதி, திருமண மண்டபம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அத்தொகுதி எம்எல்ஏ உத்தரவின்பேரில் அங்கு கட்டாமல் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. எம்எல்ஏ உத்தரவுக்குட்பட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படுவது சட்டவிரோதமானது என்ற கருத்துக்களை எல்லாம் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப் படுத்தினார்.
அதன் பிறகு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு வாரங்களுக்குள் எல்லா விவரங்களையும் அறநிலையத்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். "₹96 கோடி கொள்ளை போகும் அபாயத்திலிருந்து நீதிமன்றம் நம் கோயில்களை காக்கும்" என்ற நம்பிக்கையுடன் தான் இருப்பதாக டி.ஆர்.ரமேஷ் அவர்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
Input & Image courtesy: News