பிரம்மாண்டமான கருட விஷ்ணு சிலை
இந்தோனேசியாவில் உள்ள பாலியில் கலாச்சார பூங்கா ஒன்றில் கருட விஷ்ணு கென்கானா என்ற பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அடிமையாக இருந்த தனது தாயை விடுவிப்பதற்காக கருடன் தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை கைப்பற்றினார். அப்போது அவர் தேவர்களுடனும் இந்திரனுடம் போரிடும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அவரை எவராலும் வெற்றி கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் பறவைகளின் ராஜாவாக இருக்க பல்வேறு ரிஷிகளின் யாகத்தில் உருவாக்கப்பட்டவர். அப்படிப்பட்ட சக்தி படைத்த கருடனை மகாவிஷ்ணு தன்னுடைய வாகனமாக ஏற்றுக் கொண்டு அவரின் மீது பயணம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
இந்த கதையை நினைவு கூறும் வகையில் பாலியில் பிரம்மாண்டமான கருடன் மீது மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற பிரம்மாண்டமான சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது . 46 மீட்டர் உயரம் கொண்ட பீடத்துடன் அமைந்த அந்த சிலையின் மொத்த உயரம் 122 மீட்டர் ஆகும். இந்தோனேஷியாவின் மிக உயரமான சிலையாக இது திகழ்கிறது. 2018- ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டு அதே வருடம் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அப்போதைய இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோவிட்டோட்டோ என்பவரால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
இந்த சிலையை அமைப்பதற்கான கற்கள் கிரேன்களின் அதிகபட்ச சுமையை தாங்கும் வகையில் 1500 சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு பின்னர் ஒன்றின் மீது ஒன்றாக அடக்கப்பட்டு இந்த பிரம்மாண்ட கருட விஷ்ணு சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலையானது 21 அடுக்குமாடி கட்டிடத்தின் உயரத்திற்கு ஒப்பானது. இந்த சிலையில் கான்கிரீட் கலவை செம்பு, பித்தளை, துருப்பிடிக்காத எஃகு சட்டகம் போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கருடனின் மீது அமர்ந்திருக்கும் விஷ்ணுவின் தலையில் உள்ள கிரீடத்திற்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
சிலையை அலங்கரிக்கும் வகையில் பிரத்தியேக விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை விட சுமார் 30 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிலையை அமைக்க சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகி இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் 827 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.