கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய திருத்தலம்
கணவன் மனைவி ஒற்றுமை பலப்படவும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வணங்க வேண்டிய கோவில் இது.
கணவன் மனைவி சங்கடங்களைத் தீர்க்கலாம், பிற பெண்களின் சிந்தனையில் இருக்கும் கணவனைத் திருத்தலாம் - இத்தனைக்கும் தீர்வுதரும் தலமாகத் திகழ்கின்றது ஸ்ரீவைகுண்டநாராயணப் பெருமாள் கோயில்.
இக்கோயில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மணக்கால் அய்யம்பேட்டையில் அமைந்திருக்கிறது. அனைத்துவித சுக்கிர தோஷங்களையும் தீர்த்துவைக்கும் சக்திவாய்ந்த பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. பிற்காலச் சோழர்களின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோயில் கருவறை விமானம் போலவே அமைந்திருக்கிறது என்றும், திருப்பெருவேளுர் என்ற இந்த ஊரின் பெயரை 15-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர் காலத்தில் மணக்கால் அய்யம்பேட்டை என்று பெயர் மாற்றம் செய்ததாகவும் கல்வெட்டு வரலாறு கூறுகிறது.
ஒரு காலத்தில் பெருமைவாய்ந்த தலமாகத் திகழ்ந்து, இடைக்காலத்தில் மறைந்து, தற்போது மீண்டும் சக்திவாய்ந்த பெருமாளாக அருள்பாலிப்பதைப் பற்றி ராமசாமி பட்டாச்சாரியார், “ஒருவர் சுக சௌகர்யங்களுடன் மனநிறைவோடு வாழ சுக்கிரனின் அருள் மிகவும் அவசியம். உதாரணமாக ஒருவருக்கு ஊரே வியக்கும்படியான அழகும் இளமையும் நற்குணங்களும் அமைந்த பெண் மனைவியாக வாய்த்தாலும், எவ்விதக் காரணமுமின்றி அவளை கணவனுக்குப் பிடிக்கவில்லையென்றால் அவர்கள் வாழ்கையில் மனநிறைவோ, மகிழ்ச்சியோ ஏற்படாது. இதற்குக் காரணம், ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் சுக்கிரன் பலமிழந்தோ அல்லது ஆதிபத்திய தோஷம் பெற்றோ இருப்பதுதான். இதனை நிவர்த்தி செய்யும் தலம்தான் இது. மாதங்களில் சிறந்தது மார்கழி, புராதன காலத்திலிருந்தே மார்கழி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பெருமாளின் திருவடிகளைச் சுக்கிரன் ஒளிவடிவில் வந்து பூஜிப்பதாக ஐதீகம். மேலும், குபேரனாலும் பூஜிக்கப்படும் பெருமாள் என்பதால் சுக்கிர தோஷம், பாக்கிய ஸ்தான (9-ம் இட) தோஷம் இரண்டுக்கும் அளவற்ற சக்திவாய்ந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.
இங்கு, சக்கரத்தாழ்வாரும் யோகநரசிம்மரும் ஒன்றாகக் காட்சித் தருவதால், சுக்கிர ஹோரை வரும் நேரத்தில் தேங்காய் உடைத்து 12 சுற்று வலம் வந்து வழிபட்டால் தடைப்பட்ட காரியம் உடனே நடக்கும். பெருமாளுக்கு அபிஷேகம் செய்து, நெய்விளக்கேற்றி வேண்டுதல் செய்தால் தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். விவாகரத்துவரை கோர்ட்டு படியேறியவர்கள்கூட இங்கு வந்த பிறகு ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அதுபோல், காதல் கைகூடி திருமணத்தில் முடியவோ அல்லது பெற்றோருக்கு அது பிடிக்காமல் பிரிக்க நினைத்தாலோ எலுமிச்சைப் பழம் ஒன்றை இங்குள்ள பெருமாள் காலடியில் வைத்து பெருமாளுக்கு உரிய மூலமந்திரம் சொல்லி அர்ச்சித்து, பழத்தைப் பிழிந்து சாறு அருந்தினால் அவர்களது வேண்டுதல் நிறைவேறும். அதுபோல் மனைவிக்குத் துரோகம் செய்யும் கணவன்மார்களைத் திருத்தவும் பழம் அர்ச்சனை செய்து வாங்கிச் செல்கிறார்கள்.
திருவாரூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம்- குடவாசல்- திருவாரூர் பேருந்து மார்க்கத்தில் மணக்கால் அய்யம்பேட்டை உள்ளது.