காஞ்சி மகா பெரியவர் கண்டெடுத்த ஆதிகாரணீஸ்வரர் ஆலயம்!

சென்னையை அடுத்த தாம்பரத்திற்கு தெற்கில் பீர்க்கன்காரனை எனும் ஊரில் சொர்ணாம்பிகை உடனருள் ஆதிகாரணீஸ்ரர் ஆலயம் அமைந்துள்ளது.

Update: 2024-05-09 10:56 GMT

தமிழகத்தில் மிக தொன்மையான பல சிவாலயங்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்றாக சென்னையை அடுத்த தாம்பரத்திற்கு தெற்கில் பெரும் களத்தூர் ரயில் நிலையம் அருகில் பீர்க்கன்காரனை எனும் ஊரில் பெரும் வணிகர் பலர் சிவத்தொண்டு செய்து அடியார்களாக வாழ்ந்து அருள் பெற்ற புனித தலமாக சொர்ணாம்பிகை உடனருள் ஆதிகாரணீஸ்வரர் கருணையோடு அருள் பாலிக்கும் சிவாலயம் அமைந்துள்ளது .மன்னர்கள் காலத்தில் தொண்டை நாடான இப்பகுதியில் பெரும் கருணை என்ற பெயரில் கிராமம் செல்வ செழிப்பாகவும், பசுமை நிறைந்தும் இருந்தது.

தொண்டை மண்டல மன்னர் ஒருவர் இவ்வாலயத்தை கட்டியதாகவும் மக்களும் சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பூஜைகள் திருவிழாக்களை சிறப்பாக நடத்திக் கொண்டு செழிப்பாக வாழ்ந்ததாகவும் செவி வழி செய்திகள் சொல்கின்றன. காலப்போக்கில் பகைவர்களின் படையெடுப்பால் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டு  இவ்வூர் மக்கள் பல இடங்களுக்கு சென்று விட்டனர். தங்கி இழந்த ஒரு சிலரும் பொன் பொருளை இழந்து வாழ்க்கையைத் தொலைத்ததனால் அவர்களால் சிவாலயத்தை பராமரிக்க இயலவில்லை .ஆலயம் கவனிப்பாரற்று சிதலமடைந்துவிட்டது.

1958ல் ஒரு பிரதோஷ தினத்தன்று இத்தலத்திற்கு விஜயம் செய்த காஞ்சி மகாபெரியவர் வெட்டவெளியில் சிவலிங்கத்தை பார்த்தவுடன் இங்கு ஆதிகாரணீஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார் .அதனால் தான் இந்த இடம் பீர்க்கன் காரனை என்ற பெயர் பெற காரணம் என பிரசன்னம் போல் சிவவாக்கு கூறினார். தொடர்ந்து பல முயற்சிகள் செய்தும் இவ்விடத்தில் ஆலயம் ஏற்படுத்துவதில் சிரமம் இருந்தது .இறுதியாக கடந்த 2007 ஆம் ஆண்டு ஆலயம் எழுப்பப்பட்டு திருக்குட நன்னீராட்டு விழா சிறப்பாக நடந்தது. இவ்வாலயத்தை வழிபட பில்லி சூனியம், கடன், எதிரிகள் ஆகிய தொல்லைகள் விடுபடுவதோடு ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30-6.00 வரை உள்ள ராகு காலத்தில் சரபேஸ்வர பெருமானை ஒன்பது வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது சான்று.

Similar News