அம்மை நோய் தீர்க்கும் நாச்சியார் கோவில் ஆகாச மாரியம்மன்
தஞ்சை மாவட்டத்தில் நோய் தீர்க்கும் அம்மன் கோவில்கள் பல இருந்தாலும் அம்மை நோய்க்கு முக்கிய ஆலயமாக நாச்சியார் கோவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது
முற்காலத்தில் வாழ்ந்த கவுரவ குல கௌரவ செட்டியார்கள் குதிரை மீது வளையல் வைத்து நாள் கணக்கில் பல ஊர்களுக்கு சென்று வளையல் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் சக்தி திருத்தலமான சமயபுரத்தில் பங்குனி பெரு விழாவில் வணிகம் செய்தனர். அப்போது ஒரு நாள் அவர்களில் பெரியவர் ஒருவரின் கனவில் சமயபுரம் மாரியம்மன் இளம் பெண் வடிவத்தில் தோன்றி தனது கைகளுக்கும் வளையல் அணிவிக்க கூறினார். பெரியவரும் மகிழ்ந்து அப்பெண்ணின் பொன்னிற கைகளில் வளையல் அணிவிக்க முயன்றார். அப்போது வளையல்கள் உடைந்து கீழே விழுந்தன.
இதனால் அவர் செய்வதறியாது திகைத்து அம்மா உன் அழகிய கைகளுக்கு போட வளையல்கள் என்னிடம் இப்போது இல்லை. என் ஊருக்கு வந்தால் வகை வகையாக வளையல்களை அணிவித்து விடுகிறேன் என்றார் .இதைக்கேட்ட அம்மன் வடிவில் இருந்த பெண் சிரித்து மறைந்தாள். தெய்வத்தாயை கனவில் கண்ட அந்த பெரியவர் விழித்தெழுந்தபோது அவருடன் வந்தவர்களை அம்மை நோய் தாக்கியிருந்தது.
இதைக்கண்டு அந்த பெரியவர் மனம் வருந்தினார். அப்போது அங்கு வந்த சமயபுரம் கோவில் அர்ச்சகர் அந்த பெரியவரிடம் உடைந்து அவரது வளையல்களுக்கு பதிலாக பொற்காசுகளை அளிக்க அம்மன் உத்தரவிட்டதாக கூறினார். மேலும் அம்மை நோய் தாக்கியவர்களுக்கு அன்னையின் அருட்பிரசாதமாக திருநீறு வழங்கினார். இந்த திருநீரை தங்கள் உடலில் அவர்கள் பூசியவுடன் அம்மை நோய் குணமடைந்தது . அப்போது தனது கனவில் வந்த பெண் சமயபுரம் மாரியம்மன் என்ற உண்மை முதியவருக்கு புலப்பட்டது. இதைக்கேட்ட சக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அப்போது அவர்கள் தங்களுக்கும் அன்னை காட்சியளிக்க வேண்டும் என்று கேட்டு சமயபுரம் அன்னையை மனம் உருகி வேண்டினர். அப்போது ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி தந்தார். மாரியம்மன் தங்களுக்கு ஆகாசத்தில் காட்சி தந்ததால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆகாசமாரி, ஆகாசமாரி என போற்றி புகழ்ந்து வணங்கி துதித்தனர்.
இதைக்கண்டு மகிழ்ந்த பக்தர்கள் ஆகாசமாரியம்மனை தங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதை கேட்ட அம்மன் உங்கள் ஊர் எது? என கேட்டார். அப்போது வளையல் வணிகர்கள் தங்கள் ஊர் நறையூர் நாச்சியார் கோவில்)என கூறினர் . உடனே மாரியம்மன் தான் முல்லைக்கும் மல்லிகைக்கும் முன்கை வளையலுக்கும் ஆண்டுதோறும் வந்தருள்வேன் என கூறினார் .