சனி திசையில் சங்கடங்களை கொடுத்தாலும் பிறகு சந்தோஷ வாழ்வளிக்கும் சனீஸ்வர பகவான் - திருமண கோலத்தில் காட்சி அளிக்கும் அட்சய புரீஸ்வரர் கோவில்!
சனீஸ்வர பகவான் திருமண கோலத்தில் காட்சியளிக்கும் தலமாக இருப்பது விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்.
தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான கடலோர பகுதியான சேதுபாவாசத்திரம் அருகே சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தோஷநிவர்த்தி தலமாக விளங்கக்கூடிய அட்சயபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனீஸ்வர பகவான் மந்தா ஜேஷ்டா தேவி சமேதராக தனது இரு மனைவிகளுடன் திருமண கோலத்தில் காட்சியளிக்கிறார்.
சூரிய தேவனின் மகன்களான சனீஸ்வரருக்கும் எமதர்மராஜனுக்கும் பகை உண்டு. இந்த பகையினால் எமதர்மராஜன் சனீஸ்வரனின் காலில் அடிக்க அதனால் சனீஸ்வரனுக்கு ஊனம் ஏற்பட்டது. இதனால் கால் ஊனத்துடன் சனீஸ்வரர் நிவாரணம் தேடி மானுட ரூபத்தில் சுரைக் குடுவையை ஏந்தி பிச்சைபெற்று அதில் கிடைக்கக்கூடிய தானியங்களை சமைத்து அன்னதானமாக அளித்து வந்தார்.
இவ்வாறு ஒருநாள் விளா மரங்கள் அடர்ந்து இருந்த விளாங்குளம் கிராமத்திற்கு வந்தார். அப்போது ஓர் இடத்தில் விளாமரத்தின் வேரில் தடுக்கப்பட்டு அருகில் உள்ள பள்ளத்தில் சனீஸ்வரர் விழுந்தார். அங்கே சித்திரை திங்கள் வளர்பிறை திதியும் பூச நட்சத்திரமும் சனிவாரமும் சேர்ந்த புனித நன்னாளில் பலகோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது .இதனால் சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனது. விளா வேர் தடுத்து விழுந்து சுரந்த ஞானவாவி குளமாக ஏற்பட்டதால் இந்த கிராமம் விளம்குளம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி விளங்குளம் என்று விளங்கி வருவதாக தல வரலாறு கூறுகிறது.
ஊனம் நீக்குதல், திருமண தடை போன்ற தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இந்த கோவிலுக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்த கோவிலில் ஆண்டு தோறும் அட்சய திருதியை மற்றும் சனிப்பெயர்ச்சியை ஒட்டி விசேஷ பூஜைகள் நடந்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் வருகிற 20 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளது.