வீணையோடு காட்சி தரும் அற்புத ஆஞ்சநேயர்- எந்த ஆலயம் தெரியுமா?
வீணையோடு தோற்றமளிக்கும் ஆஞ்சநேயர் இருக்கும் ஆலயத்தை பற்றி காண்போம்.;
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது புஷ்ப குஜாம்பாள் சமேத சிங்கீஸ்வரர் திருக்கோவில். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து அமிர்தம் வெளிப்பட்டது. அமிர்தத்தை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதற்காக மோகினி வடிவம் எடுத்தார். திருமால் பின்னர் தன்னுடைய மெய்யான திருமால் வடிவத்தை பெறுவதற்காக அவர் வழிபட்ட தலம் இது என்பதால் இத்தலம் 'மெய்ப்பேடு' என்று வழங்கப்பட்டது.
'மெய்' என்றால் உண்மை என்பதையும் 'பேடு' என்றால் பெண் என்பதையும் குறிக்கும் . 'மெய்ப்பேடு' என்பதே காலப்போக்கில் மருவி மப்பேடு என்று ஆனதாக கூறப்படுகிறது. சிவபெருமான் நடனம் புரிந்த இந்த ஆலயத்தை ஈசனின் நடனத்திற்கு ஆஞ்சநேயர் வீணை இசைத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆஞ்சநேயர் வீரபாலீஸ்வரர் சன்னதியின் எதிரே நின்று வீணையை இசைத்த சிவபெருமானின் அருளை பெற்றதாக தலபுராணம் தெரிவிக்கிறது.
ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். அதேபோல் வீணையை கையில் ஏந்தி இருக்கும் கலைமகளான சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர். எனவே இத்தலத்தில் வீணையுடன் அருள் பாலிக்கும் ஆஞ்சநேயரை வணங்கினால் இசைத்துறையில் சங்கீத சக்கரவர்த்தி ஆகலாம் என்றும் இத்தலம் மூல நட்சத்திரம் உள்ளவர்களின் குறைகளை நீக்கும் தலம் என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.