பிரச்சனைகளை தீர்த்தருளும் ஆச்சர்ய அன்னை!மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி

Update: 2022-07-06 01:40 GMT

மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அன்னை பராசக்திக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். இங்குள்ள அம்பாள் புற்றிலிருந்து தோன்றியவள், எனவே புற்று தேவி என்றும் அழைக்கப்படுகிறாள்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், ஒரு முறை பிரம்ம தேவரின் தலையை சிவபெருமான் கிள்ள உமையாள் காரணமாக இருந்தமையால், சரஸ்வதி தேவி "என் கணவரை போலவே நீயும் அகோர உருவை எடுப்பாய்" என சாபமிட்டார்.

அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காக விஷ்ணு பெருமானை உமையாள் வேண்டிய போது, "மேல்மலையனூர் நதிக்கரையில் ஐந்து தலை நாகமாக நீ வடிவெடுத்து காத்திருக்க சிவபெருமான் உன் சாபம் நீக்கி உன்னை வந்தடைவார்" என விஷ்ணு பெருமான் அருளினார். அந்த சாபத்தின் படி மேல்மலையனூரில் புற்றில் அகோர வடிவிலிருந்த உமையம்மை, அங்காள பரமேஸ்வரி எனும் நாமத்தோடிருந்தார். அதன் பின் திருவண்ணாமலை சென்று அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார். இக்கோவிலின் ஸ்தல விருட்சம் வில்வ மரமாகவே உள்ளது.

அதுமட்டுமின்றி சிவபெருமானை மருமகனாக அடைந்ததால் கர்வம் கொண்ட தட்சன் சிவபெருமானையே அழைக்கமால் யாகம் நடத்திய போது . தந்தையின் தவறை உணர்த்த பார்வதி தேவி முனைந்த போது தாட்சாயிணியாக தன்னையும் யாகத்தையும் அழித்து அந்த யாகத்தில் வீழ்ந்து தன்னையும் அழித்து கொண்டார். தன் உருவை அழித்து அரூபமாக நின்ற கோலமே ஆதி பராசக்தி என்பதாகும். அந்த அரூபத்தை எடுத்து ருத்ர தாண்டவம் நிகழ்த்திய போது தேவியின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு இடத்தில் விழுந்தது. விழுந்த இடங்களை நாம் சக்தி பீடம் என்கிறோம். அதன் படி தேவியின் கை துண்டாகி விழுந்த இடம் தான் தண்டகாருண்யம். அந்த தண்டகாருண்யத்தின் ஓர் அங்கமாக திகழ்வதே மேல்மலையனூர். அன்னையின் உடல் விழுந்து சாம்பலாக கரைந்த இடம் என்பதை உணர்த்தவே இன்றும் இக்கோவிலில் பிரசாதமாக சாம்பலை தான் தருகின்றனர்.

அமாவாசை, பெளர்ணமி நாட்களில் இங்கே கூட்டம் அலைமோதுவதை காணலாம். வருடாந்திர உற்சவமான தேர் திருவிழாவின் போது ஊரே கூடி தேர் இழுப்பதை காண கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

Tags:    

Similar News