அனுமன் அவதரித்த ஆஞ்சநேயாத்ரி மலை
ஸ்ரீ ராம பக்தனான அனுமன் அவதரித்த இடமான ஆஞ்சநேயாத்ரி மலை உள்ள திருத்தலத்தை பற்றி காண்போம்.
புராதனமான நினைவு சின்னங்கள் உள்ள ஊர்களில் விஜயநகர பேரரசர்களால் உருவாக்கப்பட்ட ஹம்பி நகரத்திற்கு முக்கிய இடம் உண்டு. கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த ஹம்பிக்கு அருகில் அனுமனஹள்ளி என்ற இடத்தில் அமைந்து இருக்கிறது 'ஆஞ்சநேயாத்ரி மலை' . இதனை 'அஞ்சனா மலை' என்றும் அழைக்கிறார்கள். புராணங்கள் சொல்லும் கூற்றின்படி இந்த இடம்தான் கிஷ்கிந்தையாக இருந்ததாகவும், அஞ்சனாதேவி வாழ்ந்த மலை தான் அஞ்சனா மலை என்றும் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
அதாவது இந்த இடத்தில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்கிறது இந்த ஆலயத்தின் தல வரலாறு. ஹம்பியிலுள்ள சுற்றுலா தலங்களில் மலை மீது அமைந்த இந்த அனுமன் கோவில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த மலை தனித்துவமான அழகை கொண்டு விளங்குகிறது. இதன் சுற்றுப்புறத்தின் இயற்கை அழகும் மலையின் உச்சியில் நின்று ஊரை பார்க்கும் கண்கொள்ளாக்காட்சியும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆஞ்சநேயர் பிறந்த இடம் என்பதால் இது பக்தர்களின் புனித யாத்திரை தலைப்பில் முக்கியமானதாகவும் இருக்கிறது.
ஆஞ்சநேயர் இங்கு பிறந்ததால் 'ஆஞ்சநேயாத்ரி' என்று அழைக்கப்படும் இந்த மலை இருக்கும் பகுதிதான் ராமாயண காவியத்தில் சொல்லப்பட்டுள்ள கிஷ்கிந்தா என்ற பகுதியாகும். மலையின் உச்சியில் ஆஞ்சநேயருக்கான ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. கல்லால் ஆன படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மலையில் ஏறுவது அனைவருக்கும் எளிதான ஒன்றாக இருக்கிறது. ஆஞ்சநேயர் ஆலயம் வெள்ளை நிற பூச்சிகளால் தூய்மையான எண்ணத்தை நம் மனதில் விதைக்கிறது .