வேதங்களுக்கான திருநாள் 'ஆவணி அவிட்டம்'

வேதங்கள் தான் இந்து சமயத்தின் ஆதாரமாக இருக்கின்றன. அந்த வேதங்களுக்கான திருவிழாவாகத்தான் இந்த ஆவணி அவிட்டம் திருநாள் கொண்டாடப்படுகிறது.

Update: 2023-08-30 11:15 GMT

முன் காலங்களில் வேத பாடங்களை கற்றுக் கொள்ள தொடங்கும் ஒரு திருநாளாகவே இந்த ஆவணி அவிட்டம் இருந்திருக்கிறது. நாளடைவில் வேதம் ஓதும் நிகழ்வு என்பது இரண்டாம் பட்சமாக மாறி வேத ஆரம்பத்தில் ஒரு அங்கமாக இருந்து 'பூணூல்' அணியும் நிகழ்வு முதன்மையானதாக மாறிவிட்டது. ஆவணி அவிட்டத்தை நம் முன்னோர்கள் 'உபாகர்மா' என்று அழைத்தனர்.  இதற்கு ஆரம்பம் என்று பொருள். ஆடி அமாவாசைக்கு பின்வரும் பௌர்ணமி தினம் 'ஆவணி அவிட்டமாக' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேதங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக அறியப்படுகிறது. ரிக் வேதம் தான் மிகவும் பழமையானது.


வேதங்களை நான்காக பிரித்தவர் வியாச முனிவர் எனவேதான் இவரை 'வேதவியாசர் 'என்று அழைக்கிறார்கள். இவர் பாராசர முனிவருக்கும் ஒரு மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். பிறக்கும்போது ஞானத்துடன் பிறந்தவர்களில் வேதவியாசரும் ஒருவர். மகாபாரதம் மற்றும் வேதங்களின் கருத்துக்களை மிக தெளிவாக சுருக்கமாக சொல்லும் புராணங்கள் பலவற்றை இயற்றியவர் வியாசர் என்பது குறிப்பிடத்தக்கது. வேதங்கள் என்பது பரப்பிரம்மமான இறைவனிடமிருந்து ரிஷிகளிடம் கிடைக்கப்பெற்று அவை மண்ணுலக உயிர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் வேதங்களாக உருவானதாக சொல்லப்படுகிறது.


ஒரு வாகனத்தை நாம் நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தும் போது அதில் ஏற்படும் பழுதுகளை அவ்வப்போது சரி செய்வது போல தொடர்ந்து உச்சரித்து வரும் மந்திரங்களால் மந்திரத்திற்கு தோஷம் உண்டாகாது. அதை உச்சரிப்பவர்களால் உச்சரிப்பு தன்மை மாறி சில தோஷங்கள் வரக்கூடும். இதனை 'யாதயாமம் தோஷம்' என்பார்கள் . முக்கியமாக வேதத்தின் சாரமாக உள்ள காயத்ரி மந்திரத்திற்கு இந்த 'யாதயாமம் தோஷம்' உண்டு.


இந்த தோஷம் நீங்கி காயத்ரி முதலிய மந்திரங்கள் நமக்கு நன்மை செய்வதற்காகவே இந்த 'உபாகர்மா' எனும் ஆவணி அவிட்டம் கடைபிடிக்கப்படுகிறது. புதியதாக வேத ஆரம்பம் செய்பவர்கள் அதற்கான குருவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக வேதங்களை கற்றுக்கொள்வது சரியான முறையாகும். இதே நாளில் 'உபநயம்' எனும் பூணூல் மாற்றும் நிகழ்வும் செய்வார்கள்.

Similar News