சுந்தரர் சிவ பதிகம் பாடி முதலை வாயில் இருந்து சிறுவனை மீட்டெடுத்த அவிநாசியப்பர் திருத்தலம்!

காசி விஸ்வநாதரின் சுயம்புலிங்க வேரிலிருந்து தோன்றிய அவிநாசியப்பர் திருத்தலம் பற்றி காண்போம்.

Update: 2024-02-02 06:15 GMT

சுந்தரமூர்த்தி நாயனார் சிவதலம் தோறும் தரிசனம் செய்து கொண்டு வந்தார் .அப்படி அவர் அவிநாசியப்பர் கோவிலில் தரிசனம் செய்யும் போது ஒரு தெருவில் இரண்டு விதமான சத்தம் கேட்டு ஒரு கணம் நின்றார்.அங்கே ஒரு வீட்டில் ஏழு வயது சிறுவனுக்கு முப்புரி நூல் அணிவிக்கும் மங்கள விழா நடந்தது .அதன் எதிர் வீட்டில் அழுகை சத்தம் கேட்டது. இது பற்றி சுந்தரர் விசாரித்த போது பூணூல் அணிவிக்கும் சிறுவனின் வயதை கொண்ட எதிர்வீட்டு சிறுவனை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முதலை விழுங்கி விட்டதாகவும் அந்த சிறுவன் இருந்தால் இன்று பூணூல் அணிவிக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அந்த வீட்டினர் அழுவதாகவும் தெரியவந்தது .


சுந்தரர் அந்த சிறுவனின் பெற்றோருடைய துன்பத்தை துடைக்க எண்ணினார். அவர்களை சிறுவன் விழுங்கப்பட்ட முதலை வாழும் குளக்கரைக்கு அழைத்துச் சென்றார். 'கரைக்கால் முதலையை பிள்ளை தரச் சொல்லு காலனையே' என்று சிவனிடம் மனம் உருக வேண்டி பாடினார் சுந்தரர். அப்போது நீருக்குள் இருந்து வெளிப்பட்ட முதலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் விழுங்கிய சிறுவனை உயிருடன் உமிழ்ந்தது. அந்த சிறுவன் தற்போதைய பருவத்தில் இருந்தது மேலும் ஆச்சரியமான ஒன்று. அந்த சிறுவனின் பெற்றோர் ஆனந்தம் கொண்டனர்.


இறைவனின் கருணையையும் சுந்தரனின் பக்தியையும் நினைத்து மெய் சிலிர்த்தனர். பின்னர் அந்த சிறுவனை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனுக்கு உபநயம் செய்து வைத்தனர் .இப்படிப்பட்ட அதிசய நிகழ்வு நடந்த ஆலயம் தான் காசியில் உள்ள சுயம்பு மூர்த்தியான விஸ்வநாதரின் வேரிலிருந்து அவிநாசியில் முளைத்தெழுந்த சுயம்பு மூர்த்தி குடி கொண்டிருக்கும் அவிநாசியப்பர் திருத்தலம்.இந்த மூர்த்தி 'வாரணாசி கொழுந்து' என்று போற்றப்படுகிறார். எனவே இத்தல இறைவன் காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தியாகும் .அவிநாசியில் அருளவதால் 'அவிநாசி அப்பர்'  'அவிநாசி நாதர்' என்றும் பிரம்மதேவன் பூஜித்ததால் 'பிரம்மபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.


இத்தல அம்பாளின் திருநாமம் கருணாம்பிகை என்பதாகும். இவர் 'பெரும்கருணாம்பிகை',  'கருணாலய செல்வி',  'திருக்காமகோட்டை நாச்சியார்' என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவ்வாலய தலவிருட்சம் பாதிரி மரம். ஆதிகாலத்தில் மாமரம் தலவிருட்சமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு காசிதீர்த்தம், கங்கை தீர்த்தம், தெப்பக்குளம், நாகக்கனி தீர்த்தம் தாமரைக்குளம், ஐராவதத் துறை ஆகியவை தீர்த்தங்களாக இருக்கின்றன. கோயமுத்தூரில் இருந்து கிழக்காக 42 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பூரிலிருந்து வட மேற்க்காக 12 கிலோமீட்டர் தொலைவிலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Similar News