களிச்சான் கோட்டை ஆதனமுடைய அய்யனார் ராவுத்த சாமி கோவில்- அப்படி என்ன சிறப்பு இந்த கோவிலில்?
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் களிச்சான் கோட்டை ஆதனமுடைய அய்யனார் ராவுத்த சாமி கோவிலில் குடமுழுக்கு விழா நிறைவு பெற்றது.
திருமக்கோட்டை அருகே களிச்சான் கோட்டையில் பழமை வாய்ந்த ஆதனமுடைய அய்யனார் ராவுத்த சாமி கோவில் உள்ளது. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ராவுத்தர் சாமி என்பவர் அய்யனாருக்கு நண்பராக இருந்த காவல் புரிந்ததால் அவருக்கும் குதிரை மீது அமர்ந்திருப்பது போன்று சிலை அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள அய்யனாருக்கு சைவ விருந்தும் ராவுத்தர் சாமிக்கு ஆண்டுக்கு ஒரு முறை கிடாவெட்டி பூஜை செய்தும் வருகின்றனர் .
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து பரிவார தெய்வங்கள், தூண்டிகாரன், முன்னோடியான், அருவா புலி, விநாயகர் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு திருப்பணிகள் செய்து கட்டிடங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டன.
கிராம மக்கள் களிச்சான் கோட்டையை பூர்வீகமாக கொண்டு மலேசியா சிங்கப்பூர், துபாய், குவைத் போன்ற வெளிநாடுகளில் பணிபுரியும் ஊர் பிரமுகர்களிடம் நிதி திரட்டப்பட்டு திருப்பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு விழாவும் நிறைவு பெற்றது.
SOURCE :DAILY THANTHI