நரம்புக் கோளாறுகளை சரி செய்யும் பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

மனிதனுக்கு ஏற்படக்கூடிய எல்லா பிரச்சனைகளையும் இறைவனிடம் தான் முறையிடுகிறோம். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஐஸ்வர்ய கடாட்சத்திற்கும் அனைத்திற்கும் ஆன தீர்வு இறைவன் ஒருவனே.

Update: 2023-06-21 08:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் ஆலயம். பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சித்தர்கள் சுட்டிக்காட்டிய பெருமைமிகு ஆலயமான இதனை கி.பி 1112 -ஆம் ஆண்டு முதல் குலோத்துங்க சோழன் கட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்யும் தளமாக விளங்குவதை நாடி ஜோதிட சுவடிகள் எடுத்துரைக்கின்றது.

இதன் மூலம் இத்திருக்கோவிலில் ரிஷிகளும் மகான்களும் வழிபட்டு பேறு பெற்றதை அறிய முடிகிறது. சித்தர்கள் பாடல்கள் சிலவும் இதை உறுதி செய்கிறது.இந்த கோவிலில் எழுந்தருளி உள்ள சோளீஸ்வரர் நரம்பு சம்பந்தமான நோய்களை தீர்க்கும் மருத்துவராக விளங்குகிறார். நரம்பு சம்பந்தமான கோளாறு உள்ளவர்கள் அந்த கோளாறு நீங்க வாரந்தோறும் திங்கட்கிழமை தொடர்ந்து ஆறு வாரங்கள் பரிகார பூஜைகளும் ஏழாவது வாரம் சுவாமிக்கு மகா அபிஷேகமும் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றினால் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

இதன் காரணமாக ஏராளமானவர்கள் நரம்பு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இங்கு வந்து பயன்பெற்று செல்கின்றனர் . கோவிலின் தலவிருட்சம் வில்வ மரமாகும். இந்த ஆலயத்தின் பெயர் முதலில் குலோத்துங்க சோழீச்வரமுடைய மகாதேவர் என்பதாக இருந்தது. அம்பாளின் பெயர் காமாட்சி. இங்கு கிடைத்த கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. விஜய நகரத்தின் மன்னரும் இந்த கோவிலுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார்.

கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஊர் மணவிற்கொட்டம், பாசலி நாட்டில் உள்ள இரட்டை பாடிக்கொண்ட சோழநல்லூர் என்ற பெரும்பாக்கம் என அழைக்கப்பட்டதாக 1947 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின் மூலம் தெரிய வருகிறது. இந்த பெரும்பாக்கம் தான் நான் அடைவில் மருவி பேரம்பாக்கம் என்றானதாக சொல்லப்படுகிறது. இந்த ஊரில் உள்ள பெரியவர் சோழீஸ்வரரிடம் பெரும் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். தவறாமல் இத்தால இறைவனை தரிசிப்பார்.

திடீரென்று அவர் நரம்பு கோளாறினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் குணப்படுத்த அதிக செலவாகும் என்று கூறினர். மருத்துவர் மீது நம்பிக்கை வைக்காத அந்த பெரியவர் சோளீஸ்வரர் மீது நம்பிக்கை வைத்து பிராத்தனை செய்து வந்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. நரம்பு கோளாறு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பின்னர் முழுவதுமாக குணமடைந்தார். இதனால் அவர் மருத்துவமனைக்கு செலவு செய்வதற்காக வைத்திருந்த பணத்தை கொண்டு ஆலயத்திற்கு புதிய கொடிமரம் ஒன்று ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதுதான் தற்போது ஆலயத்தில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பேரம்பாக்கத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை பூந்தமல்லியில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையின் வழியாகவும் பேரம்பாக்கம் கிராமத்தை அடையலாம்.


Similar News