பசுவும் பாம்பும் இந்திய மரபில் ஆன்மீக அம்சம் பொருந்திய உயிரினங்களாக கருதப்படுகின்றன. அவை மனித இனத்தின் உணர்வுகளுக்கு மிக நெருக்கமான உயிரனமாக சொல்லப்படுகின்றன. மனிதர்களின் உணர்வை போலவே இவற்றிற்கும் உணர்ச்சியின் அளவு தீவிரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்து மரபில் பசுவை வழிபடுவதென்பது காலம் காலமாக இருந்து வரும் சடங்கு. பசுவை அன்னைக்கு நிகராக வைத்து பூஜிக்கும் பழக்கமுண்டு அதனால் பசுவை கோ மாதா என்று அழைக்கிறோம்.
அதுமட்டுமின்றி பசுவிலிருந்து கிடைக்கும் பொருட்களான பால், வெண்ணெய், நெய், தயிர் ஆகியவற்றையே வழிபாட்டிற்கும், பூஜைக்கும் மற்றும் அபிஷேகத்திற்கும் பயன்படுத்துகிறோம். இறைவனுக்கு நிகராக வைத்து வழிபடப்படும் உயிரினம் என்றால் அது பசு தான். அதனால் தான் ஆலயங்களில் மற்றும் முக்கிய யாகம், ஹோமம் போன்றவை தொடங்குவதற்கு முன்பாக கோ பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. அதுமட்டுமின்றி பசுவிலிருந்து கிடைக்கப்பெறும் அனைத்தும் ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அப்பேற்ப்பட்ட பசுவிற்கு உணவளிப்பதென்பது புனிதமான காரியங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.
பசுவினுடைய உடலில் 330கோடி தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்பது ஐதீகம், எனவே நாம் பசுவுக்கு அளிக்கும் உணவு அத்தனை தேவர்களுக்கு அளிப்பதற்கு சமமாகும். வாழ்வில் பிரச்சனையை தரக்கூடிய தோஷங்கள், கிரகநிலை போன்றவற்றை சீர் செய்ய கோவிற்கு தானமளிப்பது மிகச் சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது.