பெளர்ணமியில் கிரிவலம் வருவதால் ஏற்படும் ஆச்சர்ய நன்மைகள் !

Update: 2022-02-22 01:26 GMT

திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆயிரமாண்டுகள் பழமையானது. அறிவார்ந்த ஞானியர், சித்தர் என ஆன்மீகத்தின் வேடந்தாங்கலாக திகழும் ஸ்தலம். அப்பர், சம்மந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் என இங்கே பாடாதோர் யார்? வாயு, ஆகாயம், நீர், பூமி மற்றும் நெருப்பு ஆகிய பிரபஞ்சத்தின் பஞ்ச பூதங்களில் இந்த ஸ்தலம் நெருப்பை குறிப்பதாகும்.

நெருப்பின் குறியீடாகவே இங்கே கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதும் உண்டு. திருவண்ணாமலையின் மற்றொரு அடையாளம் கிரிவலம். ஆன்மீக பாதையில் பயணிப்பவர்கள் அனைவருக்கும் கிரிவலம் என்பது நீக்கமற மனதில் நிறைந்திருக்கும் ஒரு அம்சமாகும். ஆன்மீகத்தில் வேறூன்றியவர்களுக்கு வாழ்வில் ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும் என்ற சங்கல்பம் இருக்கும்.

திருவண்ணாமலை என்பது மாபெரும் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஒரு திருத்தலமாகும். அந்த மலையை வலம் வரும் நிகழ்வையே கிரிவலம் என்கிறோம். சிவபெருமானுக்கு கிரிவலப்பிரியன் என்ற பெயர் இருப்பதும் கூட இதனால் தான். இந்த கிரிவலப்பாதை என்பத்உ 14 கி.மீ தூரத்தை உள்ளடக்கியது. இந்த பாதையில் அமைந்திருக்கும் 8 லிங்கத்தை வழிபடுவது சிறப்பினும் சிறப்பாக கருதப்படுகிறது.

இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என்ற எட்டு லிங்கங்களும், எட்டு நந்திகளும் எண்ணிலடங்கா தீர்த்தங்களும் இந்த மலையை சுற்றி அமைந்துள்ளன.

எந்த நாளில் வேண்டுமானாலும் கிரிவலம் வரலாம். இருப்பினும் பெளர்ணமி நாளில் கிரிவலம் வருவது மிகுவும் உகந்ததாக கருதப்படுகிறது. காரணம் அந்த நாளில் தான் சித்தர்கள் பலரும் கிரிவலம் வருவதாக ஐதீகம். அதுமட்டுமின்றி அன்றைய நாளின் ஆற்றலானது ஆன்மீக சாதகருக்கு ஆன்மீகத்தில் ஒரு படி மேலான அனுபவத்தை நல்க கூடிய தன்மையில் இருக்கும். அதனால் தான் பல ஞானிகளும் முக்திக்கான நாளாக பெளர்ணமியை தேர்வு செய்கின்றனர்.

அதுமட்டுமின்றி கிரிவலத்தை வாரத்தின் எந்த நாளிலும் செய்யலாம். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.

ஞாயிற்று கிழமை கிரிவலம் வந்தால் முக்தி கிட்டும், திங்கட்கிழமையில் கிரிவலம் வந்தால் செல்வ வளம் சேரும், செவ்வாய் கிழமையில் கிரிவலம் வந்தால் வறுமை ஒழியும் புதன் கிழமையில் கிரிவலம் வந்தால் கல்வி செல்வம் செம்மையடையும், வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் தியானம் மற்றும் இதர ஆன்மீக பலன்கள் விரைவில் கிட்டும், வெள்ளி கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்ட பிராப்தம் கிட்டும் சனிக்கிழமை வலம் வந்தால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஒருமுறை சிவபெருமானே கிரிவலம் குறித்து சொல்லப்படுவதாக சொல்லப்படும் குறிப்பு யாதெனில்,, யாரொருவர் கிரிவலத்தை முழு அர்ப்பணிப்போடும் பக்தியோடும் செய்கிறார்களோ அவர்கள் என்னுடய தன்மையை அடைகிறார்கள்.என்பதே ஆகும்.

Tags:    

Similar News