சஷ்டி விரதம் அல்லது உபவாசம் என்பது முருக பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய விரதம். ஒரு மாதத்தில் இரண்டு சஷ்டி நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. ஒன்று அமாவாசைக்கு பின் வருகிற சஷ்டி, பெளர்ணமிக்கு பின் வருகிற சஷ்டி. அமாவாசைக்கு பின் வருகிற சஷ்டியில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது வளர்பிறையில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று பொருள் கொள்ளலாம்.
சஷ்டி விரதம் என்பது நாள் முழுமையும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று. அந்நாளில் முருகன் கோவிலுக்கு சென்று வருவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என்பது மரபாக இருப்பினும் ஒரு சிலரின், உடல்நிலை, தொழில் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிலர் உணவுகளில் கட்டுபாடுகள் நிறைந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். சுத்த சைவமாக, ஒரு நாளுக்கு ஒரு வேளை, வெறும் பழங்கள் போன்ற கட்டுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
கேரளாவில் ஒருவிதமாகவும், தமிழகத்தில் ஓருவிதமாகவும் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. எனவே பகுதிக்கு பகுதி விரத முறை மாறினாலும், சஷ்டியில் விரதம் என்பது ஆன்மீகத்தில் திளைத்திருப்பவர்களுக்கு முக்கிய நாளாகும். விரதம் என்பது உணவுகளில் கட்டுபாட்டை கொண்டுவருவதன் மூலம் அந்த உணவு உடலில் ஏற்படுத்தும் விளைவுகளை கட்டுப்படுத்த முடிகிறது. உதாரணமாக சாத்வீக உணவை உட்கொள்ளும் போது கோபம், குரோதம், காமம் போன்ற உணர்வுகளிலிருந்து ஒருவர் விடுபட முடிகிறது. எப்போது எதிர்மறை அதிர்வுகளில் இருந்து மனம் விலகியிருக்கிறதோ அப்போது நேர்மறை ஆற்றலான ஆன்மீக பாதையில் ஒருவர் பயணிக்க அவ்வழி ஏதுவாக இருக்கிறது.
சஷ்டி நாளில் விரதம் இருக்கிற போது கந்த சஷ்டி கவசம் உச்சாடணம் செய்வது மிகவும் பலனளிக்க கூடியதாக கருதப்படுகிறது. சஷ்டி விரதம் இருப்பதால் திருமணத் தடை, குழந்தை பேறு போன்ற நன்மைகள் ஏற்படுகின்றன.
மாதாமாதம் வரக்கூடிய சஷ்டியை தவிர்த்து ஐப்பசி மாதத்தில் சஷ்டி விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதம் திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நிறைவுறும் போது இந்த விரதமும் அதைவொட்டி நிறைவடையும். இந்த விரதத்தை மேற்கொள்வதால் சகலவிதமான தடைகள், துன்பங்கள் நீங்கி தீமை அழிந்து இவ்விரதத்தை மேற்கொள்பவர் வாழ்வில் நன்மை பிறக்கிறது.