ராமாயணம் எனும் புனித காப்பியத்தின், புனிதமான பகுதியாக கருதப்படுவது சுந்தர காண்டம். இந்த காப்பியத்தின் நாயகர் ஶ்ரீராமர் என்ற போதும், இந்த காண்டத்தின் நாயகனாக விளங்குபவர் அனுமர். தன்னலமில்லாமல் அவர் ராமன் பால் கொண்டிருந்த பக்தியும், அவருடிஅய பலம், அர்ப்பணிப்பு என அனைத்தும் உரக்க சொல்லும் பகுதியிது.
வால்மீகி ராமாயணத்தில் ஐந்தாம் அத்தியாயமாக வருகிறது. கதையின் படி இந்த பகுதியில் ஶ்ரீராமரின் மனைவியான சீதாதேவியை ஒரு தூதுவனாக தேடி செல்வார் அனுமர். கடலை கடப்பதம், பறப்பதும் அசுர தேவனான இராவணனின் கோட்டையை அடைவதும், அங்கே சீதா தேவியை கண்டு ஶ்ரீராமரின் செய்தியை சொல்வதும் மீண்டும் ராமர் இருக்கும் இடம் திரும்பி, கண்டேன் சீதையை என்றுரைப்பதும் இந்த சுந்தரகாண்டத்தின் உட்பொருள். இந்த அத்யாயத்தில் தான் தன் பலத்தை தானே உணரும் நாயகனாக அனுமர் உருக்கொள்வார்.
ராமாயண காதையிலேயே மிகவும் அழகான பகுதியென்று அழைக்கப்படும் இந்த பகுதியை பாராயணம் செய்வதால் பல சிறப்பு நன்மைகள் ஏற்படுகிறது. குறிப்பாக சுந்தரகாண்டத்தை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பாராயணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
உமாசம்ஹிதத்தில் சிவபெருமான் கூறுவதாக சொல்லப்படும் செய்தி யாதெனில், ஆதிஷேசனால் கூட சுந்தரகாண்டம் பாரயாணம் செய்வதன் பலன்களை ஒர் இரவில் சொல்லி முடிக்க முடியாது.
மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வின் படி மகா பெரியவர் ஒரு பக்தரின் வயிற்று வலியை சுந்தரகாண்டம் பாராயாணம் செய்ய சொல்லி போக்கியதாக குறிப்புகள் உண்டு.
ஆன்மீக வல்லுநர்களின் கூற்றின் படி சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சரகமும் ஒவ்வொரு சக்தி மிகு மந்திரங்களுக்கு ஒப்பானதாகும்.
எத்தனை தீவிரத்துடன் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்கிறோமோ அவ்வளவு தீவிரமாக இராமபிரானை நெருங்குகிறோம் என்று அர்த்தம். அதுமட்டுமின்றி ஶ்ரீராமர் புகழ் பாடப்படுகிற இடங்களில் எல்லாம் பக்தி பெருக்கால் ஆனந்த கண்ணீர் சொறிந்தபடி அனுமர் வருவார் என்பது ஐதீகம். எனவே கோள்களின் தாக்கத்திலிருந்து விடுபட அனுமரின் அருளை பெற சுந்தர காண்ட பாராயணம் பெரிதும் உதவும்.
அதுமட்டுமின்றி இந்த பகுதியை பாராயணம் செய்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், காரிய அனுகூலம் கிட்டும், ஞானம், புகழ், கீர்த்தி, தைரியம் நல்ல ஆரோக்கியம், கல்வி, செல்வம் என சகலமும் அபரிமீதமாக கிடைக்கும்.