வீடு, நிலம் என சகல செல்வம் அருளும் வராகி அம்மன். வழிபாட்டு பலன்கள்.

Update: 2023-01-20 00:45 GMT


சப்த கன்னியர்களில் ஒருவரான வராகி அம்மன். வராக(பன்றி) முகமும், மனித உடலும் கொண்டவர். இவருடைய மொத்த ஆற்றலும் இவரின் நாசியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவருடைய சுவாசத்திற்கு உலக பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் வலிமை உண்டு. பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, ஆகிய சப்த கன்னியர் வரிசையில் 5 ஆவது அம்சமாக திகழ்பவர் வராகி. சக்தி வழிபாட்டில் லலிதாம்பிகைக்கு அருகில் பக்தர்களை எடுத்து செல்பவளாக வராகி அம்மன் திகழ்கிறார்.

எந்தவொரு பிரச்சனையின் போதும் வராகி அம்மனின் பெயரை மூன்று முறை தூய பக்தியோட சொல்ல அந்த பிரச்சனையின் தீவிரத்தில் இருந்து ஒரு நிவாரணம் கிடைக்கும். தைரியம், வீரியம், வெற்றி ஆகியவற்றின் அதிபதியாக அம்பிகை திகழ்கிறாள். பக்தர்களின் குறைகளை தீர்ப்பதில் வராகி அம்மனுக்கு நிகரில்லை. வராகி அம்மனை சரண் புகுந்தோருக்கு வீடு, வாகன யோகங்கள் கிடைப்பதும், நிம்மதி ஆனந்தம் கிடைப்பதும் உறுதி. காரணம் அவளே பூமா தேவி. வராகி பஞ்சகத்தில் ஒரு வரி இது “வீடு கொடுப்பாள். வேண்டும் வரும் தரும் பிரகத் வராகி அவளே”.

இங்கே வீடு என்பதை, முக்தி வீடுபேறு என்றும் புரிந்து கொள்ளலாம். உக்கிரமான தோற்றத்தை கொண்டிருந்தாலும், பக்தர்களின் கண்ணீரை உருகும் சுபாவம் கொண்டவள் வராகி அம்மன். லலிதாம்பிகையின் மகா சேனாதிபதியாக திகழ்ந்தவள் வராகி. சப்த கன்னியரில் ஒருவர் வராகி என்ற போதும், வராகி ரூபம் மேலும் எட்டு அம்சமாக பார்க்கப்படுகிறது. மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்ன வராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருட வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என அஷ்டவராகி கோலம் உண்டு.

வராகி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வருவோரை சுற்றி உருவாகும் சக்தி வளையத்தினுள் எந்தவிதமான தீய ஆற்றல்கள், விஷ புச்சி, பாம்பு போன்றவை அண்டாது என்பது ஐதீகம். வராகியை வழிபட நடுநிசி நேரம் உகந்ததாக சொல்லப்படுகிறது. நவராத்திரி, அஷ்டமி, பஞ்சமி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை வராகிக்கு உகந்த நாட்களாகும்.

Tags:    

Similar News