நவராத்திரி விழா நாடெங்கும் பெரு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில், நவராத்திரியின் நவ அம்சங்களை நாம் ஒவ்வொன்றாக காணலாம். இன்று நவராத்திரி திருநாளின் இரண்டாம் நாள். அன்னை பராசக்தி நவ துர்கை வடிவம் எடுத்த போது இரண்டாம் அம்சமாக தோன்றியவள் பிரம்மச்சாரிணி.
பார்வதி தேவியின் தீவிரமான பக்தியையும், தவத்தையும் குறிக்கும் அம்சமாக மாதா பிரம்மச்சாரிணி திகழ்கிறார். வெள்ளை நிற ஆடை உடுத்தி, ஜப மாலையை கையில் ஏந்தி, கமண்டல நீரை மற்றொரு கையில் ஏந்தி காட்சி தருகிறார்.
மாதா பிரம்மச்சாரிணி குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், சிவபெருமானை மணம் முடிக்க வேண்டி பல்லாயிரம் ஆண்டுகள் தீவிரமாக தவம் செய்தார். அவருடைய தவத்தை கலைக்க பல்வேறு இடையூறுகள் வந்த போதும் அவருடைய தவத்திலிருந்து சற்றும் விலகாமல் இருந்தார் பார்வதி தேவி. அவரின் தீவிரத்தை பரிசோதிக்க பலவித பரிசோதனைகளும் செய்யப்பட்டன அனைத்திலும் வென்றார். ஒரு முறை பிரம்மச்சாரி வடிவம் எடுத்து சிவபெருமானே நேரில் வந்து பல புதிர் நிறைந்த கேள்விகளை தேவியிடம் கேட்கலானார். அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்த அன்னையின் அறிவையும், பக்தி தீவிரத்தையும் கண்டு மெச்சி அன்னையை மணக்க சம்மதம் தெரிவித்தார்.
தன்னுடைய தவ காலம் முழுவதிலும் வெறும் வில்வ இலை மற்றும் தண்ணீரை அருந்தியே வாழ்ந்துவந்தார். இந்த தீவிரத்தை தான் சிவபெருமான் விரும்பினார். எனவே நவராத்திரியின் இரண்டாம் நாள் வழிபாட்டின் போது அன்னையை வணங்குவது உகந்ததாகும்.
சுவாதிஸ்டான சக்கரத்தில் வசிப்பவராக அன்னை திகழ்கிறார். அவர் கையில் ஏந்தியிருக்கும் ருத்ராக்சம் தவத்தை குறிக்கிறது. அவர் கையில் இருக்கும் கமண்டல நீர் அவர் தவத்தின் இறுதி நாட்களில் வெறும் நீரை மட்டுமே அருந்தினார் என்பதை குறிக்கிறது. அன்னையின் உடலோடு இருக்கக்கூடிய தாமரை மலர் அவரின் ஞானத்தை குறிக்கிறது. வெள்ளை நிற உடை புனிதத்தை குறிக்கிறாது.
அன்னையை வணங்குகிற போது,
"ஓம் தேவி பிரம்மச்சாரிணி நமஹ," என்ற உச்சாடனத்தை சொல்லி பூஜிக்கலாம். மலர்கள், அரிசி, சந்தனம், பால், தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை அர்ப்பணித்து அன்னையை வணங்குவதன் மூலம் ஒருவர் விரும்பிய இலக்கை அடைய முடியும் என்பது நம்பிக்கை.