வெற்று கால்களுடன் இறைவனை தரிசிப்பதும் அடிபிரதட்சணம் செய்வதும் ஏன்?

Update: 2022-12-10 00:30 GMT

நம் மரபில் இறைவனை அணுகுவதற்கு எத்தனையோ பிரார்த்தனை முறைகள், வழிபாட்டு வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் வெறுங்காலுடன் நடந்து இறைவனை தரிசிப்பது. பாத யாத்திரை செல்லும் போது, இறைவன் இருக்கும் இடத்திற்கு அருகில் பெரும்பாலும் காலணிகள் அணிவதை தவிர்க்க சொல்வதுண்டு. இது இறைவனுக்கு நாம் செலுத்தும் பக்தியும் அர்ப்பணிப்பும் என்பதை தாண்டி இதன் பின் இருக்கும் தார்பரியங்கள் சிலவற்றை காண்போம்.

நரம்புகள் மிக அதிகமாக செல்லும் இடமாக கால் பாதங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வியர்வை சுரபிகளும், 14,000 நரம்புகளும் பாதத்தில் வந்து முடிவதாக சொல்லப்படுகிறது. உடலில் எங்கேனும் வலியெடுத்தால், காலில் குறிப்பிட்ட இடத்தை மென்மையாக அழுத்துவதன் உடலில் குறிப்பிட்ட இடத்தில் வலி குறைவதை நாம் பார்த்திருக்கிறோம். அக்குபஞ்சர் போன்ற சிகிச்சை முறைகளும் நடப்பில் உண்டு. இவையணைத்தும் உணர்த்துவது ஒன்று தான். கால்பாதங்களில் உடலின் ஒட்டு மொத்த கட்டுபாடும் உண்டு. அப்படிப்பட்ட பாதங்கள் தரையில் படுவதன் மூலம் நம் உடல் சமநிலையடைகிறது.

ஆன்மீகரீதியாக மண்ணுக்கும் மனிதருக்குமான உறவு மிக நெருக்கமானதாக சொல்லப்படுகிறது. மண்ணில் இருந்து விளைந்து வரும் உணவையே உட்கொண்டு வாழ்கிறோம். பின்பு மண்ணையே சேர்கிறோம் என்பதால் மனிதர்களுக்கு மண்ணுடனான தொடர்பு மிக நுட்பமானது. உணவை தவிர்த்து நாம் மண்ணை அதிகம் உணர்வதற்கான வாய்ப்பு வெற்று காலில் நடக்கும் போது கிடைக்கிறது. நம்முடைய பாதம் தரையில் படுகிற போது நம்மால் இந்த பூமியை உணர முடிகிறது.

இன்றைய நவீன மருத்துவத்தில் மண்ணில் வெறுங்கால்களுடன் நடப்பதும், மண்ணில் சிறிது நேரம் செலவிடுவதும் மனதிற்கு அமைதியை தருகிறது. அழுத்தத்திலிருந்து விடுதலையளிக்கிறது என்பது நிருபணமாகியுள்ளது. அதனால் தான் குழந்தைகளுக்கு செடி வளர்ப்பது, கடற்கரை மணலில் வீடு கட்டுவது போன்ற விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

மேலும் பூமியிலுள்ள நேர்மறையான ஆற்றல் (எலக்ட்ரான்) பாதங்கள் வழியே உடலினுள் ஊடுருவி உடல் முழுவதும் புத்துணர்வை பரவ செய்கிறது. இதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள், அழுத்தங்களிலிருந்து வெளியேற முடிகிறது. இறைவன் இருக்கும் புனித இடத்திற்கு செல்கிற போது அந்த இடத்தில் இருக்கும் நேர்மறை அதிர்வு நமக்குள் வெகு எளிதாக செல்வதற்கு வெறும் பாதங்களுடன் நாம் இருப்பது உதவுகிறது. அடிப்பிரதக்ஷணம் போன்ற வேண்டுதல்களெல்லாம் இந்த அறிவியல் நுட்பத்துடன் வழக்கதில் இருப்பதே.

நம் முன்னோர்கள் எதையும் வெறுமனே சொல்லிவிடவில்லை என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு

Tags:    

Similar News