புனிதம் என்பது எது? ஞானத்தின் மறு உருவமான புத்தர் பகிரும் ரகசியம்

Update: 2021-04-28 23:30 GMT

விழிப்பின் உச்சம், ஞானத்தின் மறு உருவம் கவுதம புத்தர். அவரின் போதனைகள் புத்த மதத்தினை பின் தொடர்பவர்களுக்கு வேதமாக விளங்குகிறது. அதில் பிரபலமான போதனைகள் இங்கே…!

ஒரு குவளை துளித்துளியாகவே நிறைகிறது. எனவே சிறிய முயற்சிகளை ஒரு போதும் அலட்சியப்படுத்தாதீர்கள். யாரும் ஒரே இரவில் வெற்றியாளர்கள் ஆவதில்லை. யாரொருவர் பொறுமையாக இருக்கிறார்களோ அவர்களின் குவளை நிச்சயம் நிரம்பும்.


நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள் என்பது புத்தரின் பிரபலமான போதனைகளுள் ஒன்று. உங்கள் வாழ்வை தரமுள்ளதாக மாற்ற உங்கள் சிந்தனைகளை தரமுள்ளதாக நிரப்புங்கள் என்பதே எளிமையான அர்த்தம்.

அடுத்து, கோபம் கொள்வது என்பது கொதிக்கிற சுடும் கனலை கைநிறைய அள்ளி வைத்திருப்பதை போன்றது. நீங்கள் கைகளில் வைத்திருக்கும் வரை அது உங்களையும் சூடு தாளாமல் நீங்கள் வீசியெறிந்தால் அது மற்றவர்களையும் சேர்த்தே காயப்படுத்தும். எனவே மன்னிக்க பழகுங்கள், அதுவும் விரைவாக மன்னிக்க பழகுங்கள்.


எத்தனை புனித சொற்களை சொன்னாலும் சரி, எத்தனை புனிதமானவைகளை நீங்கள் கேட்டாலும் சரி நீங்கள் அறம் மிகுந்தவராக நடந்து கொள்ளாதவரை எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. பேசுவது வீண் என்கிறார்கள். உண்மையில் நீங்கள் செயல்படும் வரை பேச்சு என்பது வீண் தான். எனவே புனிதத்தை நிதர்சனத்தில் அனுபவிக்க வேண்டுமெனில் செயலில் இயங்குங்கள். கடவுள் எல்லோருக்கும் அவரவர் உணவை கொடுத்திருக்கிறார் ஆனால் அவற்றை உங்கள் கரங்களிலிலேயே வந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் நாம் தான் முட்டாள். எனவே செயல்படுங்கள்.

அடுத்த அவரின் பிரபலமான போதனை முதலில் "நீங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் முன், முதலில் நீங்கள் ஒருவரை புரிந்து கொள்ளுங்கள் "

பெரிதும் பின்பற்றப்படும் அவரின் போதனைகளுள் முக்கியமானது நீங்கள் ஆயிரம் போர்களை வெல்லும் முன் முதலில் உங்களை வெல்லுங்கள். தன்னை வெல்பவனே மாவீரன்.

மிக முக்கியமான போதனை, உறங்க செல்லும் அனைவரும் அடுத்த காலையில் விழிப்பதில்லை எனவே அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றியுடன் இருங்கள். உங்களை சுற்றியிருப்பவற்றை ஆராதியுங்கள், அரவணையுங்கள், அங்கீகரியுங்கள்.

Tags:    

Similar News