அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்டமான சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவில்!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ராபின்ஸ் வில்லி டவுன்ஷிப்பில் அமைந்துள்ளது சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் ஆலயம்.
இந்தியா மற்றும் வெளி நாடுகளில் பல்வேறு இடங்களில் சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவில்கள் இருக்கின்றன. அந்த வகையில் புதியதாக 183 ஏக்கர் பரப்பளவில் நியூ ஜெர்சியில் ராபின்ஸ் வில்லி டவுன்ஷிப்பிலும் புதிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் உலகிலேயே மிக பிரம்மாண்ட ஆலயங்களில் முக்கியமானதாக இருக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. உலகில் மிக அதிக பரப்பளவில் கட்டப்பட்ட ஆலயங்களில் முக்கியமானது. கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் அதற்கு அடுத்த இடத்தில் இந்த ஆலயம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
அந்த அளவுக்கு மிகப்பெரிய வளாகம் கொண்டதாக சுவாமி லட்சுமி நாராயணன் அக்ஷர்தாம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயமானது 255 அடி அகலம் 345 அடி நீளம் கொண்டதாகவும் 191 அடி உயரம் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் முழுமையும் இந்திய கலாச்சாரத்தின் வடிவமைப்பு கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. கோவிலின் வடிவமைப்பில் சுவாமி லட்சுமி நாராயணன் முக்கிய சன்னதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அடுத்ததாக 12 துணை கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது குவிமாடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களில் செதுக்கள்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.
அதோடு மகான்கள், சிறு தெய்வங்கள் ஆச்சாரியார்கள் என்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் இந்த ஆலயத்திற்குள் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். கட்டுமானத்தில் 2 மில்லியன் கன அடி கல் பயன்படுத்த பட்டு இருக்கிறதாம். பல்கேரியா துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல், கிரீஸ், துருக்கி மற்றும் இத்தாலியில் இருந்து பாக்சைட் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கிரானைட் இந்தியாவிலிருந்து மணல் கல் ஆகியவை எடுக்கப்பட்ட மிகவும் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. காண்போரை வியக்க வைக்கும் கண் கவர் சிலைகளும் பிரம்மாண்டமான கோவில் அமைப்பும் மனதை மயக்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடுகிறது. அமெரிக்காவிற்கு சென்றால் இந்த ஆலயத்தை தரிசிக்காமல் திரும்ப வேண்டாம்.