வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நம்பிக்கைகளும், சடங்குகளும் நம் நாட்டில் ஏராளம் உண்டு. மேலும் ஒவ்வொரு அம்சத்தை பிரதிபலிக்கிற கடவுளர்களும் நம் மரபில் உண்டு. வழிபாட்டு முறையும், சடங்குகளும் நம் நாட்டில் வேறுபட்டாலும். அனைவரும் அடைய விரும்பும் இறுதி நிலை இறை நிலை தான்.
அந்த வகையில் நமக்கிருக்கும் மற்றொரு செளகரியம், ஆண்டவனை இங்கு தான் வழிபட வேண்டும் என்கிற எல்லைகள் நமக்கில்லை. புகழ் பெற்ற பெரிய கோவில்கள் தொடங்கி, ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சிறிய கோவில்கள் வரை அவரவர்களின் நம்பிக்கை ஏற்றவாறு வணங்க முடிகிறது. இன்னும் சிலர் கோவில்களுக்கு செல்லாமல், தான் மனதிலேயே இறைவனை நினைத்து வழிபட்டதாக சொல்லும் விஷயங்களையும் நாம் கேள்வி படுகிறோம்.
எனவே பெரிய எல்லைகள், கட்டுபாடுகள் அற்ற வழிபாடு முறை நம்முடையது. தூய பக்தி, இறை வழிபாட்டில் தீவிரம், அர்ப்பணிப்பு இவையெல்லாம் தான் நம் ஆன்மீக பாதையை தீர்மானிப்பதாக உள்ளது. அந்த அடிப்படையில் நாம் தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும் ஓரு பழக்கமெனில் அது இறை வழிபாடு முடிந்த பின் பிரசாதம் வழங்கும் பழக்கம்.
சிறிய இலை, பூ, பழம் தொடங்கி விபூதி குங்குமம் என இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட எதுவும் நமக்கு பிரசாதமாக வழங்கப்படுவதுண்டு.
"ஒருவர் தூய பக்தியுடன் சிறிய இலை, பழம், பூ அல்லது நீரை அர்ப்பணித்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன் " – பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதை.
ஒருவர் தூய பக்தியுடன் படைக்கும் எவற்றையும் இறைவன் ஏற்று கொள்வார் என்கிறோம். ஆனால் வீட்டில் பிரசாதம் செய்கிற போது அதை செய்பவருக்கு ஏற்படும் சந்தேகம் என்னவெனில் இறைவனுக்கு படைக்க இருக்கும் பிரசாதத்தை அதன் ருசி சரியாக இருக்கிறதா என சுவைத்து பார்க்கலாமா என்பது தான்.
இதில் இரு வகை உண்டு. ருசித்து பார்க்க கூடாது. அவ்வாறு செய்தால் அதன் புனிதத்தன்மை கெட்டு விடும் என்று ஒரு சாரரும். ஏன் இறைவன் இராமாயணத்தில் சபரி உண்டு விட்டு கொடுத்ததை உண்ணவில்லையா? எனில் பக்தர்கள் சுவைத்ததை இறைவன் ஏற்று கொள்கிறார் தானே ? என்று கேட்பார்கள்.