ஆண்டாள் உத்தரவால் உருவான தேர் : அறிவியல் வளர்ச்சியற்ற காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேரோட்டம் நடைபெற்ற திருவில்லிபுத்தூர் ஆலயம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க திருவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும். ஒன்பதாவது நாள் காலையில் தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் இரவு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது.
ஆண்டாள் கோவில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராகும். பழங்காலத்தில் இருந்த தேர் சிதலமடைந்த காரணத்தால் தற்போதுள்ள புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. திருவரங்கத்தில் ஸ்ரீரெங்க நாராயனார் என்ற ஜீயர் இருந்தார். அவருடைய கனவில் ஆண்டாள் தோன்றி தனக்கு தேர்வு செய்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த ஜீயர் நானே தினமும் மண்பாத்திரத்தில் சாப்பாடு வாங்கி உணவு அருந்தி வருகிறேன். என்னால் எப்படி தேர் செய்ய முடியும். அந்த அளவிற்கு என்னிடம் பொருள்செல்வம் இல்லை என்றார்.
அதற்கு ஆண்டாள் உனக்கு வேண்டிய அத்தனையும் நான் தருகிறேன் எனக் கூறிவிட்டு மறைந்தார். மறுநாள் காலையில் திருவரங்கம் ஜீயருக்கு பல்லக்கில் ஒரு ஓலை வருகிறது. அந்த ஓலையில்' வானமாமலையில் பட்டம் ஏற்றுக்கொள்ள வரவும்' எனக் கூறப்பட்டு இருந்தது. உடனே அந்த ஜீயர் ஸ்ரீரங்க பெருமாளிடம் போய் நான் பட்டம் ஏற்றுக்கொள்ளலாமா? என உத்தரவு கேட்டார். பெருமாளும் அதற்கு இசைவு தெரிவித்ததால் ஜீயர் அந்த பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
இதை அடுத்து அவர் வானமாமலையில் ஜீயராக பட்டம் ஏற்க பல்லக்கில் செல்கிறார். அங்கு மொத்தம் 30 பட்டங்கள் உண்டு. ஒவ்வொரு பட்டத்திற்கும் ஒரு பெயர் சூட்டப்படும். அதன் படி இவர் பட்டம் பெற்ற பிறகு 'பட்டபிர்பிரான் ஜீயர்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பட்டர் பிரான் என்பது பெரியாழ்வாரின் நாமம் ஆகும். அவர் பட்டம் பெற்ற மறுநாள் பெரிய சூறாவளி காற்று அடித்து தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தேக்கு மரங்கள் சாய்ந்தன.
புதிய ஜீயர் பட்டம் ஏற்ற பிறகு இவ்வாறு அசம்பாவிதமாக மரங்கள் சாய்ந்து விழுகிறதே என ஊர் மக்கள் வருந்தினர். ஜீயரும் மனம் வருந்தியபடி பெருமாளிடம் சென்று இதுகுறித்து சொல்லி வழிபட்டார். அன்றைய தினம் இரவு ஆண்டாள் கனவில் தோன்றி, 'சாய்ந்து தேக்கு மரங்களை எல்லாம் சேர்த்து எனக்கு தேர் செய்ய வேண்டும் எனவும் அதற்காகத்தான் நான் உனக்கு பட்டம் கொடுத்துள்ளேன்' எனவும் கூறினார். ஆண்டளின் உத்தரவுப்படி அந்த தேக்கு மரங்கள் அனைத்தும் யானைகள் மூலமாக திருவல்லிபுத்தூர் கொண்டுவரப்பட்டன.