800 ஆண்டு பழமையான சுரங்க கால்வாய் இருந்தும்.. சிதம்பரம் நடராஜர் கோயிலில் தண்ணீர் ஏன் தேங்குகிறது.?
800 ஆண்டு பழமையான சுரங்க கால்வாய் இருந்தும்.. சிதம்பரம் நடராஜர் கோயிலில் தண்ணீர் ஏன் தேங்குகிறது.?
நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை நீடித்து வருவதால் பல இடங்கள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளது. இதில் சிதம்பரம் நடராஜர் கோயிலும் உண்டு.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மழை நீர் வெளியேறும் சுரங்கப்பாதையை ஆய்வு செய்து வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. புரெவி புயலால் கனமழையால் கோவில் தெப்பக்குளமாகி போனது. கோவிலுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் கோவிலில் உள்ள வடிகால் கால்வாய்கள் அடைபட்டதே என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். கோவிலுக்கு அடியில் தண்ணீரை வெளியேற்றும் வகையில் மிகப் பெரிய சுரங்கப்பாதை அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து கூறுகின்றனர்.
இந்த சுரங்கப்பாதை வழியாக கோவிலில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணிரை வெளியேற்றி விட முடியும். யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் தொடங்கும் நிலவரை கால்வாய் வழியாக தில்லை காளிக்கோவில் தெப்பகுளத்துக்கு தண்ணீரை கொண்டு சென்று அங்கிருந்து வடிகால் வாய்க்காலான தில்லையம்மன் ஓடைக்குச் செல்லும் வகையில் வடிகால் வசதி அரசர்கள் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க கால்வாயை அண்ணாமலைப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி இந்த சுரங்கப்பாதையை அமைத்துள்ளனர். இந்த கால்வாய் தற்போது தூர்ந்து போய் கிடப்பதே கோவிலில் தண்ணீர் தேங்க காரணம் என்று கூறப்படுகிறது. அரசு இதனை உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.