ஶ்ரீ பத்மநாப சுவாமி கோவில் மஹாவிஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்டது. பதம்நாபசுவாமி கோவில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில அமைந்துள்ளது. தற்சமயம் இந்த கோவிலை இன்றும் திருவாங்கூர் அரச பரம்பரை நிர்வகிக்கிறது. இந்த கோவில் பார்ப்பதற்கு அச்சு அசல் திருவட்டூர் ஆதிக்கேசவ பெருமாளை போலவே இருக்கும் என பலர் சொல்கின்றனர். இந்த கோவிலில் பெருமாள் ஆனந்த சயன கோலத்தில் இருக்கிறார். அதாவது எல்லையற்ற யோக நித்திரையில் ஷேசனின் மேல் பள்ளி கொண்டிருக்கிறார். பண்டைய காலத்தில் திருவாங்கூர் மஹாராஜாவை ஶ்ரீ பத்மநாபதாசா என்று அழைப்பார்கள். அதாவது பத்மநாபருக்கு சேவை என்று பொருள்.
இந்த கோவிலின் உள்நுழைவதற்கு பிரத்யேக உடை கட்டுபாடுகள் உண்டு. மேலும் 108 திவ்யதேசங்களுள் மிக முக்கியமான கோவிலாக திகழ்கிறது. இந்த கோவிலின் பெருமையை திவ்ய பிரபந்தத்தில் போற்றி பாடியுள்ளனர். இந்த கோவிலில் இருக்கும் பெருமாளின் அமைப்பை காண கண் கோடி வேண்டும். ஆனந்த சேஷன் எனும் நாகத்தின் மீது பள்ளி கொண்டிருக்கிறார் அய்யன். ஆனந்த சேஷன் தன் ஐந்து தலைகளை உட்புறம் நோக்கியவாறு கொண்டுள்ளது. மேலும் பெருமாளின் வலது கரம் சிவலிங்கத்தை தொடுவதை போன்ற அமைப்புடன் இருக்கிறது.
செல்வத்தை குறிக்கும் ஶ்ரீதேவியும், பூமியின் அதிபதியான பூதேவியின் உடனிருக்க தன் தொப்புளில் இருந்த நீண்ட தாமரையில் இருந்து பிரம்மதேவரும் அமைந்துள்ளார். இந்த திருவிக்ரகம் 12000 சாலிகிராமத்தால் ஆனது. இந்த சாலிகிராமங்கள் நேபாளத்தில் இருக்கும் கந்தகி நதிக்கரையிலிருந்து எடுத்துவரப் பட்டவை அந்த சாலிகிராமத்திற்குரிய சடங்குகள் அனைத்தும் பசுபதிநாதர் ஆலயத்தில் செய்யப்பட்டது. இங்கு பெருமாளுக்கு கடுசர்கரயோகம் எனும் தனித்துவம் வாய்ந்த ஆயுர்வேத காப்பு சாற்றப்படுகிறது.
இந்த கோவில் குறித்து ஏராளமான சிறப்புகளும், ரகசியங்களும் புராணங்களில் குவிந்துள்ளன. மிக குறிப்பாக இந்த கோவிலில் இருக்கும் ரகசிய அறை. இந்த கோவிலில் ஆறு அறைகள் உண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரின் ஏழு பேர் கொண்ட குழு, திருவாங்கூர் அறக்கட்டளையின் தலைமை ட்ரஸ்டீயுடன்ன் இந்த அறைகளை திறந்தனர். ஆவணப்படுத்தும் நோக்கில் இந்த ஆறு அறைகளும் ஏ, பி, சி, டி, இ, எப் என்று பிரிக்கப்பட்டது. இதில் ஐந்து அறைகள் திறந்த போது இந்த உலகமே வாயடைத்து போகும் அளவு தங்க குவியல் இந்த கோவிலில் இருந்து கிடைத்தது.
ஆனால் இந்த ஆறு அறைகளில் மிகவும் புனிதமான மற்றும் மர்மமான அறையாக கருதப்படுவது இரண்டாவது அறையான பி அறை. இதை இன்றளவும் யாரும் திறந்ததில்லை. காரணம் மிக புனிதமான, தெய்வீகமான வகையில் இந்த கதவுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கதவுகள் நாக பந்தம் அல்லது நாக பாச மந்திரங்களை கொண்டு சித்த புருஷர்களால் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த கோவிலை உயர்ந்த நிலையில் இருக்கிற சாதுக்களால் மட்டுமே மிக மிக புனிதமான கருட மந்திரத்தை முறையாக உச்சரிப்பதால் மட்டுமே திறக்க முடியும் என சொல்கின்றனர்.
கருட மந்திரத்தை தவிர வேறு யார் எதை கொண்டும், யாரும் இதனை திறக்க முடியாது. கருட மந்திரத்தை அந்த உயர்நிலையில் இருக்கும் சாது உச்சரிக்கும் போது கதவு தன்னால் திறக்கும். எந்தவித மனித அல்லது தொழில்நுட்ப உதவியோ தேவையில்லை என்பது நம்பிக்கை. இதனை தாண்டி அந்த கதவை திறக்க முயன்றவர்கள் தோல்வியை தழுவியிருக்கிறார்கள் என்றும், மீறி முயற்சி நடந்தால், அது பெரும் பல தீமைகளை நிகழ்த்தலாம் எனவும் நம்பப்படுகிறது. எனவே இந்த கோவிலை பெரும் தெய்வீக ஆற்றல் பாதுகாக்கிறது என்பதை பெரும்பான்மையான மக்கள் திடமாக நம்புகின்றனர்.
Image : Zee News