அருகம்புல் ஆனைமுகனின் விருப்பத்திற்குரிய வழிபாட்டுப் பொருளாக மாறியது எப்படி தெரியுமா?
சாதாரண அருகம்புல் ஆனைமுகனின் விருப்பத்திற்குரிய வழிபாட்டு பொருளாக மாறிய நிகழ்வை விளக்கக்கூடிய புராணக் கதை.
அது எமலோகம் எமன் வீற்றிருந்த சபையில் அனைவரும் இசைக் கருவிகளை இசைத்தும், பாடல்கள் பாடியும் நடனமாடிக் கொண்டிருந்தனர். ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகிய மூவரும் இசைக்கேற்ப அற்புதமான நடனம் ஆடினர் . அவர்களின் நடனத்தை அந்த சபையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது. இதில் திலோத்தமையின் நடனம் எமனை கவர்ந்தது. அவளது அழகும்தான். அவனுக்கு காமம் தலைக்கேறியது. தன்னுடைய சபையில் பலரும் கூடி இருக்கிறார்கள் என்பதையும் மறந்து ஓடி சென்று திலோத்தமையின் கரங்களை வலுவாக பற்றினான் எமதர்மன்.
தகாத இந்த செயலால் என்ன கேடு விளையப் போகிறதோ என்று, அங்கிருந்து அனைவரும் திகைத்தனர். ரம்பையும் ஊர்வசியும் அங்கிருந்து ஓடி மறைந்தனர் .அதையெல்லாம் காணும் நிலையில் எமன் இல்லை தர்மத்தை நிலை நிறுத்தும் அவனுக்கு இப்போது காமமே தலை தூக்கி நின்றது. அதனால் திலோத்தமையின் கரங்களை மேலும் வலுவாக பற்றினான் .அவனது காமம் திரண்டு சுக்கிலமாக வெளியேறியது. அதன் மூலம் ஒரு அசுரன் தோன்றினான். அவன் வெப்பத்தால் அவன் தொட்டதெல்லாம் நெருப்பில் பொசுங்கியது .அவன் வாயிலிருந்தும் நெருப்பு வெளிப்பட்டது. இதனால் அவன் 'அனலாசுரன்' என்று அழைக்கப்பட்டான்.
தேவர்களையும் ,மக்களையும், முனிவர்களையும் தன்னுடைய வெப்பத்தால் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர் . அவர் தன் படையுடன் சென்று அனலாசுரனுடன் போரிட்டு அவனை வீழ்த்தினார் .கீழே விழுந்த அவன் மீது வருணன் சுடுமழை பொழிவித்தான் .குளிர்ச்சியான சந்திரன் அனலாசுரன் மீது தன்னுடைய குளிரான கதிர்களை பாய்ச்சினான். இதை அடுத்து விநாயக பெருமான் அனலாசுரன் அருகில் சென்றார் . அவனை சிறிய உருவமாக மாற்றிய விநாயகர் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.