தொழிலில் வெற்றியடைந்து அமோகமான வாழ்வுக்கு வணங்க வேண்டிய பிள்ளையார் நீலகண்ட பிள்ளையார் - எந்த ஊரில் உள்ளார் தெரியுமா?

கல்வி, வேலை, திருமணம், குழந்தை பேறு, நோயற்ற வாழ்வு, நீங்காத செல்வம், நிம்மதியான வாழ்வு போன்ற அனைத்துக்கும் முழுமுதல் கடவுள் விநாயகரை முறையாக வழிபட்டால் மேற்கண்ட அனைத்து பேறுகளும் கிடைக்கும் என்பது முன்னோர் வாக்கு.

Update: 2023-06-15 05:15 GMT

தமிழகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்,  திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில் வரிசையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.


கிபி 1825 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின் அமைச்சர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார் . இதற்காக சிகிச்சைக்காக திருப்பெருந்துறை செல்வதற்காக பேராவூரணி வழியாக தனது அரசு பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் பேராவூரணியில் உள்ள ஒரு அரச மரத்தடியில் தனது பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி ஏந்தல் நீலகண்ட பிள்ளையாருக்கு இரண்டு பேர் பூஜை செய்வதையும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் அமைச்சர் பார்த்தார்.


உடனே கோவிலுக்கு அவரும் சென்றார். பின்னர் தனக்குள்ள நோயைப் பற்றி பூஜை செய்பவர்களிடம் கூறினார். உடனே அவர்கள் இன்று இரவு நீங்கள் இங்கு தங்கி விட்டு மறுநாள் காலையில் கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் நீராடி விட்டு நீலகண்ட பிள்ளையாரை வணங்கி திருநீறு பூசுங்கள். உங்கள் நோய் உடனே குணமாகும் என்று நான் அவர்கள் கூறியபடி அமைச்சரும் இரவில் தனது பரிவாரங்களுடன் கோவிலில் தங்கினார். மறுநாள் காலையில் கோவில்குளத்தில் குளித்துவிட்டு நீலகண்ட பிள்ளையாரை நினைத்து திருநீறு பூசினார். உடனே நீரிழிவு நோய் முற்றிலுமாக குணமானதாக தல வரலாறு தெரிவிக்கிறது.


இந்த பிள்ளையாருக்கு தீராத வினை தீர்க்கும் நீலகண்ட பிள்ளையார் என்று சிறப்பு பெயரும் உண்டு.  இந்த கோவிலின் தலவிருட்சம் அரசு மற்றும் வேம்பு மரங்கள் ஆகும் . புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டு தங்கள் தொழிலை தொடங்கினால் அவர்கள் தொடங்கிய தொழில் பல மடங்கு வளர்ச்சி அடைந்து அதிக லாபம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .


எனவே புதிதாக தொழில் தொடங்க வருபவர்கள் இந்த கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டு தங்கள் புதிய முயற்சியில் ஈடுபடுகிறார்கள். நீரிழிவு நோய் நிவர்த்தி ஸ்தலம் என பெயர் பெற்ற இந்த கோவில் மூலவராக நீலகண்ட பிள்ளையார் உள்ளார். உற்சவரராக சுப்ரமணிய சுவாமி மற்றும் வள்ளி தெய்வானை சாமிகள் உள்ளனர்.

Similar News