இறந்தவர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செய்யும் விதமாக பிண்டம் வைத்தல் என்னும் சடங்கினை நாம் செய்து வருகிறோம். இந்து மரபில் இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்கில் முக்கியமானதாக கருதப்படுவது பிண்டம் வைத்தல். காரணம் ஒரு தனிமனிதரின் வெற்றிக்கு நம் முன்னோர்களின் ஆசி மிக முக்கியமானது. மேலும் புராணங்களின் படி, இறந்தவர்களின் ஆன்மா முக்தி அடைய வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர் செய்யும் மிக முக்கிய சடங்காக இது உள்ளது.
இந்த பிண்ட தானத்தை செய்வதற்கு சில குறிப்பிட்டு இடங்கள் மிக மிக புனிதமானதாக கருதப்படுகின்றன. உதாரணமாக கயா, ஹரித்வார், பத்ரிநாத், குருக்ஷேத்ரா, அலாஹபாத் போன்ற இடங்கள் மிக புனிதமானதாக கருதப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பிண்ட தானத்திற்கு கயா மிகவும் முக்கியமான இடமாக சொல்லப்படுகிறது. கயா ஸ்ரதாவில் ஓர் உயிருக்கு வழங்கப்படும் பிண்ட தானத்தின் மூலம், இறந்துவிட்ட அந்த உயிர் சொர்க லோக பதவியை எட்டும் என்பது நம்பிக்கை.
திரேத யுகத்தில் பிறந்த ஶ்ரீ ராமர், தன்னுடைய தந்தையான தசரதருக்கு இந்த இடத்தில் பிண்ட தானத்தை வழங்கியதாக ஐதீகம். இந்த யுகத்தில் 12,96,000 வருடங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. கயா பகுதிக்கு சுத்திகரிக்கும் தன்மை இருக்கிறது. எனவே பெரும்பாலான மக்கள் தங்கள் பெற்றோர்கள் முன்னோர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த இந்த இடத்தை தேர்வு செய்கின்றனர். புராணங்களில் பல பகுதிகளில் கயா இடம்பெற்றுள்ளது, மஹாபாரதத்தில் இந்த இடத்தை கயாப்புரி என அழைக்கின்றனர்.