பெண்கள் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க தினசரி வீட்டில் பெண்கள் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும் பற்றிய தகவல்களை காண்போம்.
காலையில் எழுந்ததும் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் வாயில் கதவை திறக்கும் போது லட்சுமி தேவியை மனதை நினைத்துக் கொண்டு திறக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் வாசலில் கோலமிடாமல் அடுப்பு வேலைகளைத் தொடங்கக்கூடாது. அமாவாசை போன்ற திதிகளில் மட்டும் யாரெல்லாம் அமாவாசை விரதம் கடைபிடிக்கிறார்களோ அவர்கள் மட்டும் கோலமிடத் தேவையில்லை.
அடுப்பு வேலைகளை தொடங்குவதற்கு முன்னர் அடுப்பை ஈரத் துணியினால் நன்கு சுத்தம் செய்து கோலமிட்ட பின்னரே வேலைகளை துவங்க வேண்டும். அல்லது முதல் நாள் இரவிலேயே அனைத்து அழுக்கு பாத்திரங்களையும் சுத்தம் செய்து அடுப்பு , அடுப்பு மேடை அனைத்தையும் சுத்தம் செய்து கோலமிட்டு வைத்து விட்டால் காலையில் அதனை செய்ய தேவையில்லை.
தினசரி காலை முதன் முதலில் அடுப்பை பற்றவைக்கும் போது அக்னி பகவானையும் அன்னபூரணியும் மனதில் நினைத்துக் கொண்டு அடுப்பை பற்ற வைக்க வேண்டும். நீங்கள் சமைக்கும் போது சாந்தமான மனதுடன் யாரிடமும் பேசாமல் மன அமைதியோடு ஏதேனும் மந்திரங்களை மனதில் உச்சரித்துக் கொண்டே சமைத்தால் தெய்வ அனுகிரகமும் கிடைக்கும் சமையலின் ருசியும் நன்றாக இருக்கும்.
பூஜை அறையையும் வீட்டின் சமையலறையும் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருங்கள். அதற்காக மற்ற இடங்களெல்லாம் சுத்தமாக வைக்கக் கூடாது என்பது அர்த்தமல்ல. முடிந்தவரை வீடு முழுவதையும் எல்லா நேரங்களிலும் சுத்தமாகவும் ஆங்காங்கே குப்பைகளோ, அழுக்குத் துணிகளோ இல்லை கழுவ வேண்டிய பாத்திரங்களோ இல்லாமல் எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்திருங்கள். பிரம்ம முகூர்த்தத்திலும் மாலையிலும் விளக்கேற்றுவது அதீத பலன்களைத் தரும். விளக்கு ஏற்றுவதற்கு முன்னர் சுமங்கலி பெண்கள் தங்களை தூய்மைப்படுத்திக் கொண்டு, உச்சியில் குங்குமம் இட்டுக்கொண்டு, தலையில் சிறிதேனும் பூ வைத்துக்கொண்டு எப்பொழுதும் பார்ப்பதற்கு அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டும்.
வீட்டில் உள்ள குழந்தைகளையோ பெரியவர்களையோ யாரையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டாதீர்கள். வீட்டில் முடிந்தவரை நேர்மறையான வார்த்தைகளை மட்டுமே கூறுங்கள். இரவில் அனைத்து பாத்திரங்களையும் கழுவினாலும் சாதம் வடிக்கும் பானையையோ அல்லது குக்கரையோ கழுவாமல் அதில் சிறுதேனும் சாதத்தை வைத்து விட்டு அடுத்த நாள் காலை அந்த சாதத்தை எடுத்து குருவிகளுக்கோ காக்கைக்கோ வைத்த பின்னர் அந்த பாத்திரத்தை கழுவுங்கள். தினமும் வீட்டில் உள்ள நபர்களை தவிர ஏதேனும் ஒரு உணவு ஜீவனுக்கு உணவிடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.