அகத்தியருக்கு தமிழ் புத்தாண்டில் திருமண காட்சியளித்த ஈசன்!
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபவிநாசர் - உலகாம்பிகை கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழாவின் 10 ஆம் நாளில் சிவபெருமான் பார்வதி தேவி திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்த வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முற்காலத்தில் தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமானுக்கு பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தது. திருமண கோலத்தில் சுவாமி - அம்பாளை தரிசிப்பதற்காக தரிசிப்பதற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் இமயமலை அமைந்துள்ள வடபகுதிக்கு சென்றனர். இதனால் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது .எனவே உலகை சமநிலைப்படுத்த அகத்திய முனிவரை அழைத்த பரமேஸ்வரன் அவரை உடனடியாக தென்திசை நோக்கி செல்லுமாறு கட்டளையிட்டார் .
இதனால் சுவாமி - அம்பாளின் திருமண காட்சியை காணும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடுமோ என்று அகத்தியர் வருந்தினார். அகத்தியரின் வருத்தத்தை உணர்ந்த ஈசன் இங்கு நடைபெறும் திருமண கோலத்தில் பொதிகை மலை சாரலில் இருக்கும் பாபநாசத்தில் சித்திரை மாத பிறப்பு நாளில் சித்திரை விசு தினத்தன்று நேரில் வந்து காட்சி கொடுப்போம் என்று உறுதி அளித்தார். இதை அடுத்து அங்கிருந்து விடைபெற்ற அகத்தியரிடம் தாமிரபரணி தீர்த்தத்தை சிவபெருமான் வழங்கினார். அதை தன் கமண்டலத்தில் பெற்றுக்கொண்டு தென்பகுதிக்கு வந்து சேர்ந்தார் அகத்தியர்.
சித்திரை-1 ஆம் தேதி பாபநாசத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருள் ஆசி வழங்கினார். மேலும் அகத்தியரை பொதிகை மலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை பொதிகை மலையின் உச்சியில் இருந்து தாமிரபரணி நதியாக பாய விட வேண்டும் என்றும் ஈசன் கூறினார். அவ்வாறு பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மூலம் இப்பகுதி செழுமையுற்று திகழ்கிறது. சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை அகத்தியருக்கு அளித்த நிகழ்வு ஆண்டுதோறும் பாபநாசம் கோவிலின் பத்து நாள் உற்சவமாக நடைபெறும் .