யாக தீயிற்கு இணையானது பசியெனும் நெருப்பு - அன்னதானத்தின் மகிமை என்ன?

யாக தீயிற்கு இணையானது பசியெனும் நெருப்பு - அன்னதானத்தின் மகிமை என்ன?

Update: 2021-01-17 06:00 GMT

தானம் என்பது நம் அறத்தின் வெளிப்பாடு. நல்ல கர்மாக்களை நாம் சேகரிப்பதற்கான ஒரு வழி. அனைத்து விதமான தானங்களிலும் சிறந்த தானம் அன்னதானம். உடை, உறைவிடம், கல்வி, பொன், பொருள் என பலவற்றை பலவிதங்களில் தானம் வழங்குவதை நாம் கேள்வியுற்று இருக்கிறோம். ஆனால் இவை அனைத்து வாழ்க்கையின் தரம் உயர்வதற்காக வழங்கப்படும் தானம். அன்னதானம் ஒன்று மட்டுமே வாழ்க்கையை வாழ்வதற்காக தரப்படும் தானம். வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் உயிரினை காப்பதற்காக தரப்படும் தானம்.  மற்ற தானத்தின் பயன் பெற்றவரையும் தந்தவரையும் சென்று அடைய சில குறிப்பிட்ட காலம் பிடிக்கலாம். ஆனால் உணவு தானம் மட்டுமே பெற்றுக்கொண்டவருக்கு உடனடியான மன நிறைவை பெற்று தருவதாக அமையும்.

தானத்திலே சிறந்ததாக இருப்பது அன்னதானம் காரணம்,  பசி பிணி போக்குவதை போன்ற பெரும் பாக்கியம் உண்டோ ? உணவை பகிர்ந்தளிப்பது என்பது, நம் உயிரை, வாழ்வை பகிர்தளிப்பதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. அதானாலேயே அன்னதானத்திற்கு ஜீவதானம் என்று பெயர். ஜீவன் என்றால் வாழ்க்கை.

உணவு என்பது அனைத்து உயிர்களின் அடிப்படை. பறவைகளுக்கு , மிருகங்களுக்கு மற்ற உயிரனங்களுக்கு நாம் கொடுக்கிற உணவு என்பது சக உயிரினங்களிடம் நாம் கொண்டிருக்கும் காருண்யத்தை காட்டுகிறது. இதற்கு பின்னிருக்கும் உளவியல் யாதெனில், பசித்த மனிதனுக்கு உணர்வு மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக, கோபம், பதட்டம், போன்ற எதிர்மறையான உணர்வுகள் பசித்திருப்பவருக்கே தோன்றும்.

ஆனந்தம் என்பது எல்லையற்றது. அதில் குறிப்பாக, உணவு என்பது ஆனந்தத்தின் ஆரம்பம். இதனை வழங்குவதால் ஒரு மனிதனுக்கு நிறைவையும், மன அமைதி இரண்டையும் நாம் ஒருவருக்கு வழங்க முடியும். பூதானம், கோதானம், வஸ்தரதானம், வித்யாதானம் போன்ற பல வகையான தானங்கள் இருக்கின்றன. ஆன்மீக ரீதியாக அன்னதானத்திற்கு சொல்லப்படும் கருத்தியல் யாதெனில், உணவை பெற்றுக்கொள்கிற வயிற்று பகுதியானது பஞ்ச பூதங்களில், நெருப்புக்கான இடம். இந்த நெருப்பை உணவால் தான் அணைக்க முடியும்.  

இதை இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில், ஆன்மீக மரபில் வயிற்றில் எரிகிற பசிக்கான நெருப்பு யாகத்தின் நெருப்பை ஒத்திருப்பதாகவும். அந்த பசியெனும் அக்னிக்கு நாம் தருகிற உணவு ஹோமத்தில் நாம் தருகிற புனித ஆகூதிக்கு ஒப்பானது எனவும் சொல்லப்படுகிறது. இந்த தார்ப்பரியத்தை உணர்ந்து உணவு உண்டால். உண்கிற உணவின் மகத்துவமும் புரியும். அன்னதானத்தின் மேன்மையையும் நாம் உணரலாம். எனவே முடிந்த அளவில், முடிந்த விதத்தில்  தானத்தை வழங்குவோம். 

Similar News