கோபத்தால் பிறரை துன்பப்படுத்தும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு நரகத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது - விளக்கும் ஜென் கதை

சொர்க்கம் , நரகம் உள்ளதா நாம் கோபப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? இவற்றை விளக்கக்கூடிய ஜென் கதையை பற்றி பார்ப்போம்.

Update: 2023-01-03 07:00 GMT

ஜென் குருவின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து இருந்தான் அந்த போர் வீரன். சாந்தமான முகத்துடன் இருந்த அந்த குருவிடம் "குருவே இந்த உலகத்தில் சொர்க்கம் , நரகம் என்று சொல்கிறார்களே உண்மையிலேயே அப்படி ஏதேனும் இருக்கிறதா? "என்று கேட்டான் . அவனுடைய கேள்வியை உதாசீனம் செய்த ஜென் குரு "நீயெல்லாம் ஒரு போர் வீரனா ?பார்ப்பதற்கு பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னை படை வீரனாக நியமித்த இந்நாட்டு அரசன் எவ்வளவு பெரிய பிச்சைக்காரனாக இருக்க வேண்டும் " என்று அந்த போர்வீரனை பார்த்து வசைபாடத் தொடங்கினார். போர் வீரனுக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. தன்னுடைய உறையிலிருந்து வாளை உருவினான். அதை பார்த்து கொஞ்சமும் பயம் கொள்ளாத ஜென் குரு "ஓஹோ வாள் வைத்திருக்கிறாயா ?அதை வைத்து என் தலையை சீவி விடுவாயா ? அவ்வளவு தைரியம் இருக்கிறதா உனக்கு?" என்று வெறுப்பேற்றினார்.


ஆத்திரத்தின் உச்சியில் ஏறத்தாழ ஜென் குருவின் தலையை சீவும் நோக்கில் வாளை வேகமாக வீசிவிட்டான் போர் வீரன். தன் தலையின் அருகே வந்த வாளை தடுக்கும் நோக்கில் சட்டென்று போர்வீரரின் கையை இறுகமாக பிடித்தார் ஜென் குரு. பின் இப்படிச் சொன்னார் "பார்த்தாயா...இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன". அதைக் கேட்டதும் நிலைமையை உணர்ந்து கொண்ட அந்த போர்வீரன் வாளை கீழே இறக்கி தலைகவிழ்ந்து ஜென்குருவை வணங்கினான். இப்போது அந்த குரு மீண்டும் சொன்னார் "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன".

Similar News