கிரிவலத்தின் போது ரமணரே தங்கி சென்ற அதிசய ஆதி அண்ணாமலையார் கோவில்!

Update: 2022-12-27 00:30 GMT

திருவண்ணாமலையில் அருணாச்சாலேஸ்வரரை தரிசித்த யாவரும் தரிசிக்க வேண்டிய மற்றொரு ரூபம் ஆதி அண்ணாமலையார் கோவில். இந்த கோவில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும், இன்று நாம் வணங்கு பிரதான அண்ணாமலையார் கோவிலுக்கும் முன் தோன்றிய அண்ணாமலையார் இவர் என்பதால் இவருக்கு ஆதி அண்ணாமலையார் என்று பெயர். மேலும் மலையின் மீதன்றி கீழ்புறத்தில அமைந்திருப்பதால் அடி அண்ணாமலை என்றும் அழைக்கின்றனர்.

தேவாரம் பாடப்பெற்ற தலங்களுக்கு இணையான புகழை கொண்டது இந்த கோவில். காரணம் இது தேவாரம் வைப்புத் தலமாக போற்றப்படுகிறது. இக்கோவிலின் மூலவருக்கு ஆதி அண்ணாமலையார் என்பதும் அம்பாளுக்கு அபிதகுசலாம்பாள் என்பதும் திருப்பெயராகும்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணம் யாதெனில், பிரம்ம தேவர் தன் சிருஷ்டியில் இருந்து திலோத்தமை என்கிற பேரழகியை படைத்தார். பின் அந்த அழகில் அவரே மோகம் கொண்டார். அவரிடமிருந்து தப்பிக்க திலோத்தமை புறா வடிவமெடுத்தார், பிரமம் தேவரும் ஆண் புறா வடிவமெடுத்து திலோத்தமையை துரத்தினார். திலோத்தமை செய்வதறியாது சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தார். திலோத்தமையை காக்கவும், புறா வடிவிலிருந்த பிரம்ம தேவரை எதிர்கொள்ளவும் வேடவன் வடிவில் வந்தார் சிவபெருமான். இதனாலேயே சிவனுக்கு வேடபுரீஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு. வந்திருப்பது சிவன் என்றறிந்து தான் கொண்ட மோகத்திலிருந்து விடுபட்டார் பிரம்மர். இனி ஒருபோது இது போன்ற தவறு செய்வதில்லை என உணர்ந்து அடி அண்ணாமலையில் ஆதி அருணாச்சலேஸ்வரருக்கு லிங்கத்தை ஸ்தாபித்தார்.

இந்த லிங்கம் குறித்து அருணாச்சல புராணத்தில், பிரம்மதேவர் தன் மகனிடம் கூறும் போது, தன்னுடைய தீய வினைகள் யாவும் தீர தான் இந்த லிங்கத்தை ஸ்தாபித்ததாக கூறுகிறார். மேலும் இந்த கோவிலில் இருக்கும் சிவனை தரிசத்தால், அந்த தரிசனத்திற்கு சிவ யோக முக தரிசனம் என்ற பெயர். திருமூலர் அப்படியொரு தரிசனத்தை இங்கு கண்டிருக்கிறார் என்கிறது புராணம். மேலும் பகவான் ரமணர் இங்கு கிரிவலம் வரும் போதெல்லாம், இந்த ஆலயத்தில் 2 – 3 நாட்கள் தங்கி செல்வார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்ததில் சிவபெருமானுக்கு பாடப்படுகிற திருவெம்பாவை இத்தலத்தில் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.

Tags:    

Similar News