சென்னையிலுள்ள எலியட்ஸ் கடற்கரை அருகில் கடலின் ஓசையோடு அமைந்துள்ளது அஷ்ட லட்சுமி திருக்கோவில். இக்கோவில் இலட்சுமி தேவிக்கு அர்பணிக்கப்பட்டது. இலட்சுமி தேவி என்றால் வெறும் செல்வம், பணம் அருள்பவள் என்பது பொருளல்ல. சகலவிதமான செளந்தர்யங்களையும் அருள்பவள் இலட்சுமி. அவளின் எட்டு ரூபங்களான அஷ்ட இலட்சுமி ரூபத்திற்கு இங்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. செல்வம், புகழ், வளம், வெற்றி, தைரியம், வீரம்,, அன்னம், குழந்தை, என அனைத்தையும் அருள்பவளாக இலட்சுமி தேவி இருக்கிறாள்.
அஷ்ட இலட்சுமிகளுக்கும் இங்கே தனித்தனியான சந்நிதிகள் உண்டு. ஒரு சந்நிதியிலிருந்து மற்றொன்றிற்கு திரும்ப வந்த வழியில் வரத் தேவையில்லை. காஞ்சி மடத்தின் ஶ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளின் விருப்பத்தின் பேரில் இந்த தலம் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோவிலின் பிரதிஷ்டை ஏப்ரல் 1976 செய்யப்பட்டது .
உத்திரமேரூரில் இருக்கும் சுந்தரராஜ பெருமாள் கோவிலின் அமைப்பை மாதிரியாக கொண்டது இக்கோவில். அஷ்ட இலட்சுமி மார்களும் இங்கிருக்கும் கோவிலில் நான்கடுக்கில் 9 தனி சந்நிதிகளில் அமர்ந்துள்ளனர். இலட்சுமி தேவியார் தன் துணைவரான மஹா விஷ்ணுவின் அருள் பாலிக்கும் சந்நிதி இரண்டாம் அடுக்கில் அமைந்துள்ளது. ஒருவர் முதல் முதலில் இந்த சந்நிதியை வணங்கி அங்கிருந்து படிக்கட்டுகளை தொடர்ந்து சென்றால் அது மூன்றாம் தளத்தில் உள்ள சந்தான இலட்சுமி, விஜயலட்சுமி, வித்யலட்சுமி மற்றும் கஜ லட்சுமி சந்நிதிக்கு வழி வகுக்கும் அங்கிருந்து மேல் நோக்கி செல்லும் படிகட்டுகள் நான்காம் தளத்தில் அமைந்திருக்கும் ஒரே சந்நிதியான தனலட்சுமி சந்நிதிக்கு கூட்டி செல்லும்.
பின்பு இங்கிருந்து கீழ் இறங்கினால் தரை தளத்தில் உள்ள ஆதி இலட்சுமி, தான்யலட்சுமி, மற்றும் தைரிய லட்சுமி ஆகியோரை வழிபடலாம். இக்கோவிலில் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், விஷ்ணு பெருமானின் தசாவதார அமைப்பை இங்கே காணலாம். அதுமட்டுமின்றி இக்கோவிலில் குருவாயூரப்பன், கணபதி, தன்வந்திரி மற்றும் ஆஞ்சநேயரின் திருவுருவம் உள்ளது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் கோலாகலமாக நடப்பது வழக்கம். அதுமட்டுமின்றி இந்துக்களின் விஷேச தினங்களான ஆடி வெள்ளி, மற்றும் இதர புனித நாட்களில் இங்கே ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம். இக்கோவிலின் நிழல் பூமியில் விழாத வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும்.
Image : Tamilnadu tourism