இந்த கோவிலில் நின்றால் திருவண்ணாமலையை தரிசிக்க முடியும் அதிசயம்!
ஆருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் ஆலயம், விழுப்புரம்.
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் தாலுக்காவில் அமைந்துள்ளது அதுல்யநாதேஸ்வரர் ஆலயம். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலம் இது. இங்கிருக்கும் மூலவருக்கும் அதுல்ய நாதேஸ்வரர் என்பதும் அம்பாளுக்கு அழகிய பொன்னழகி என்பதும் திருப்பெயராகும். தேவாரம் பாடப்பெற்றா 274 ஸ்தலங்களுள் ஒன்று. மலையின் மீது இரண்டேக்கர் பரப்பளவில் ஏழடுக்கு கோபுரத்துடன் பிரம்மாண்டமாக காட்சி தரும் கோவில் இது.
அய்யனுக்கும் அம்பாளுக்கும் தவிர்த்து இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான சந்நிதிகள் உண்டு. இக்கோவிலில் வைகாசி மாதத்தில் நிகழும் பிரம்மோற்சவ திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் சோழர்களால் விரிவுப்படுத்தப்பட்டது என்பது வரலாறு.
புராணங்களின் படி, விஷ்ணு பெருமான் வாமன அவதாரத்தில் அவதரித்த போது மாவலி சக்ரவர்த்தியை வதம் செய்த பாவம் தீர சிவனை வழிபட்டு வந்தார். சிவபெருமானை வணங்க வணங்க அவருடைய வினைகளும் அழிந்தது. அவ்வாறாக சிவபெருமானை வேண்டி அவரின் தரிசனம் பெற்ற தலம் இது.
இந்த கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க சம்பந்தர் பெருமான் சென்று கொண்டிருந்த போது இறையருளால் இந்த இடத்தில் தடுத்தாட்கொள்ளப்பட்டார். அந்த காலத்தில் இந்த திருத்தலம் பல்வேறு சமயத்தினரின் பிடியில் இருந்தமையால் கோவில் பூட்டப்பட்டிருந்தது. சம்பந்தர் பெருமான் பதிகம் பாடி திருக்கோவிலை மீட்டெடுத்து இங்கே மீண்டும் சிவ தரிசனத்தை அனைவருக்கும் கிடைக்க செய்தார். மேலும் திருவண்ணாமலை சிவனை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவர் பிரதிஷ்டை செய்த அறையணிநாதர் என்று பெயர். இந்த சந்நிதி மூலவருக்கும் அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் உள்ளது.
சம்பந்தர் பெருமான் பதிகம் பாடிய இடத்தில் அவருடைய திருப்பாதத் தடம் இன்றும் உள்ளது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலை அண்ணாமலையாரை நேரடியாக பார்க்கலாம் என்பது இக்கோவிலின் தனிப்பட விஷேசம்.
மேலும் இங்கிருக்கும் சனிஸ்வர பகவான் காகத்தின் தலையின் மீது தன் கால் வைத்திருப்பதை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் அருள் பாலிக்கிறார். எனவே சனி தோஷம் இருப்பவர்கள் இங்கே வந்து வணங்க அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை.
அறை என்றால் தமிழில் பாறை என்று பொருள். அணி என்றால் அழகு என்ற பொருள். எனவே பாறையில் அழுகுற அமைந்திருப்பதால் இவருக்கு அறையணிநாதர் என்று பெயர். இதன் சமஸ்கிருத வடிவமே அதுல்யநாதர் என்பதாகும்இந்த சிவாலயத்தில் நின்றால் திருவண்ணாமலையை தரிசிக்க முடியும். ஆச்சர்யமூட்டும் திருத்தலம்.