தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இரணியூரில் அமைந்துள்ளது ஆட்கொண்ட நாதர் ஆலயம். நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் கட்டப்பட்ட 9 சிவாலயங்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் அஷ்டலக்ஷ்மி முக மண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கருளும் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மூலவருக்கு ஆட்கொண்டநாதர் என்பது, அம்பாளுக்கு சிவபுரந்தேவி என்பதும் திருப்பெயராகும்.
இக்கோவிலின் அர்த மண்டபத்தில் உற்சவரும், நடராஜரும் அருள் பாலிக்கின்றனர். தெற்கு நோக்கி அமைந்துள்ளது அம்பாள் சந்நிதி. சூரியன், சந்திரன், நவகிரஹம், சோமஸ்கந்தர், விநாயகர் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு பிரகாரத்தில் சந்நிதிகள் உண்டு. குறிப்பாக முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அமர்ந்திருப்பது போல பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது எங்கும் காணக்கிடைக்காத அரிய காட்சி.
இக்கோவிலின் தனித்துவங்களுள் இதன் கட்டமைப்பும் ஒன்று. இக்கோவிலில் மிக பிரமாண்டமான சிலைகள் அமைந்துள்ளன. குறிப்பாக மகா மண்டபத்தில் உள்ள தூண்களில் மிகவும் நுட்பமான வேலைபாடுகள் நிறைந்த 200க்கும் மேற்பட்ட சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. நவதுர்கை, முருகன், விநாயகர், சிவன் பார்வதி திருக்கல்யாணம் போன்ற பல சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கோவில் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 34 கிராமங்களை சேர்ந்த 3800 குடும்பங்களுக்கு பாத்தியப்பட்டது இந்த கோவில். இக்கோவில் அஷ்ட பைரவ ஷேத்திரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இங்கிருகும் பைரவர் காலபைரவராகவும், இங்கிருக்கும் விநாயகர் வித்தக விநாயகராகவும் அருள் பாலிக்கிறார்.
விஷ்ணு பெருமான் ஹிரண்யகசிபுவை கொன்ற பாவம் போக இங்கிருக்கும் சிவபெருமானை வேண்டினார், அதனாலேயே இந்த ஊருக்கு இரணியூர் என்ற பெயர் வந்தது என்பது ஐதீகம். விஷ்ணுவிற்கு பாவத்திலிருந்து விடுதலை அளித்து ஆட்கொண்டதால் இங்கிருக்கும் பெருமானுக்கு ஆட்கொண்டநாதர் என்ற பெயர் நிலைத்தது. இக்கோவில் உள்ள மகா மண்டபத்தில் பெருமாளின் அவதாரங்களும், நவதுர்கை எடுத்த ஒன்பது அம்சங்களும் சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
இக்கோவிலில் நடக்கும் குபேர பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நல்ல கல்வி, நல்ல வேலை கிடைக்க இங்கிருக்கும் பைரவரை வணங்கி வடை மாலை அர்ப்பணிப்பது இக்கோவிலின் வழக்கம்.