பைஜிநாத் கோவில் என்பது நாகாரா அமைப்பை கொண்ட கோவிலாகும். இந்த கோவில் இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் காங்க்ரா எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக இருக்கும் சிவபெருமானை வைத்தியநாதர் என்கின்றனர். கிட்டதட்ட 1204 ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்ட கோவிலாகும் இது.
இந்த கோவிலின் உட்புறம் மிக பெரும் மதில்களால் ஆனது. ஏராளமான சிற்பங்கள் இந்த கோவிலை சுற்றி செதுக்கப்பட்டுள்ளன. இந்த கோவில் குறித்து சொல்லப்படும் சர்ச்சை யாதெனில், வைத்தியநாத ஜோதிர்லிங்க கோவில் அல்லது பாபா தம் அல்லது பைஜிநாத் கோவில் என அழைக்கப்படும் திருத்தலம் சிவபெருமானின் மிக முக்கிய புனித தலங்களான பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்றாகும்.
இதில் தான் சிக்கலே. வைத்தியநாதர் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ள இடம் தான் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது . காரணம் இதே பெயரில் இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கோவில் உண்டு.
அந்த இடங்கள் பின்வருமாறு… ஜார்கண்ட் மாநிலத்தில் தேவ்கர் எனும் இடத்தில் அமைந்துள்ள வைத்தியநாதர் கோவில். மகாராஷ்ட்ர மாநிலத்தின் பரளி எனும் இடத்தில் வைத்தியநாதர் கோவில் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் நாம் குறிப்பிடும் பைஜிநாத் கோவில்.
இந்த மூன்று கோவில்களிலும் தாங்கள் தான் ஜோதிர்லிங்கம் என உரிமை கோருவதாக ஒரு சர்ச்சை நிலவுகிறது.
இந்த கோவிலின் அமைப்பு இந்திய கட்டிடக்கலைக்கு ஒரு முத்திரையாக விளங்குகிறது. ஏராளமான உருவங்களை சுவற்றில் வடித்துள்ளனர். இக்கோவிலின் பிரதான மண்டபத்தில் இரண்டு பெரும் கல்வெட்டுகள் காண கிடைக்கின்றன. இந்த கல்வெட்டுகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் குறிப்பாக, சாதரதா எழுத்துருவில் மற்றும் உள்ளூர் மொழியான பஹரி எனும் மொழியில் எழுதப்பட்டுள்ளது.