சும்பன்,நிசும்பனை அழித்த ஹரித்வார் சண்டிதேவியின் ஆச்சர்யமூட்டும் வரலாறு

மாதா சண்டி தேவி ஆலயம், ஹரித்வார்

Update: 2022-01-21 00:30 GMT

இந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தில் ஹரித்வார் எனும் புனித நகரில் அமைந்துள்ளது சண்டி தேவி ஆலயம். சிவாலிக் மலையில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இமாலய மலையின் தெற்கு தொடர்ச்சியில் இந்த மலை அமைந்துள்ளது. சுசாத் சிங் எனும் காஷ்மீர அரசரால் 1929 இல் இக்கோவில் கட்டப்பட்டது. இருப்பினும் இங்கு மூலவராக இடம் பெற்றுள்ள சண்டி தேவியின் திருவுரு 8 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது என்று சொல்கின்றனர்.

ஹரித்வாரில் அமைந்துள்ள ஐந்து முக்கிய தீர்த்தங்களை பஞ்ச தீர்த்தங்கள் என்று சொல்வர். அந்த வகையில் பஞ்ச தீர்த்தங்களுள் ஒன்றான பர்வத தீர்த்தம் இந்த கோவிலில் அமைந்துள்ளது. எனவே இக்கோவிலுக்கு நீல் பர்வத தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. அது மட்டுமின்றி தேவியின் சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்றாக கருதபடுகிறது. ஹரித்வாரில் உள்ள மற்ற இரு சக்தி பீடங்கள் மானசா தேவி கோவில் மற்றும் மாயா தேவி கோவிலாகும்.

இங்குள்ள சண்டி அம்மனின் மற்றொரு திருப்பெயர் சண்டிகா என்பதாகும். ஒரு முறை சும்பன் மற்றும் நிசும்பன் எனும் அரக்கர்கள் தேவலோகத்தையே ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் வசம் தேவலோகம் இருந்த போது இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்கள், தேவதைகளையும் கொடுமை செய்தனர். அந்த சித்ரவதையில் இருந்து தங்களை மீட்குமாறு அனைத்து தேவாதி தேவர்களும் தேவி பார்வதியிடம் முறையிட்டனர். அப்போது பார்வதி தேவியிடம் இருந்து ஒரு அழகான பெண் ரூபம் ஒன்று வெளிப்பட்டது. அந்த அழகில் சொக்கி அவளை மணக்க எண்ணினான் சும்பன் ஆனால் அதை அப்பெண் மறுத்துவிடவே அவளை கொள்ள முயன்ற போது தேவி பார்வதியிடமிருந்த வெளிப்பட்ட அந்த பெண் ரூபம் உக்கிரம் கொண்டு சும்பன் நிசும்பனை வதைத்தாள். அந்த பெண்ணே சண்டிகா அல்லது சண்டி என்று வழிபட படுகிறாள். தன் உக்கிரத்தை தணிக்க சண்டி தேவி நீல் பர்வத தீர்த்தத்தில் ஓய்வு பெற்றதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த மலைத்தொடரில் இரண்டு மலை சிகரங்கள் உள்ளன. அதன் பெயர் சும்பன் மற்றும் நிசும்பன் என்றே அழைக்கப்படுகிறது.

ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறும் போதும், நவராத்திரி மற்றும் சண்டி செளதா எனும் விழாவின் போதும் இங்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.

Tags:    

Similar News